தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்த பள்ளி மாணவ -மாணவிகள்.
நெல்லை அருகே மது போதையில் பள்ளிக்கு வருவதாக தலைமை ஆசிரியர் மீது மாணவர்கள் புகார்
- மடத்துப்பட்டி தொடக்கப்பள்ளியில் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
- தலைமை ஆசிரியர் மது போதையில் பள்ளிக்கு வருவதாக பொதுமக்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை சீவலப்பேரியை அடுத்த மடத்துப்பட்டி கிராமத்தில் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 40-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட மொத்தம் 2 ஆசிரியர்கள் மட்டுமே பணி செய்து வருகிறார்கள்.
1 முதல் 5-ம் வகுப்பு வரை செயல்படும் இந்த பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியர் மது போதைக்கு அடிமையாகி பள்ளிக்கு சரிவர வருகை தராமல் இருப்பதாகவும்,
மேலும் மது போதையில் பள்ளிக்கு வருவதாகவும், இதனால் மாணவர்களின் படிப்பு பாழாகி விடுவதாகவும் அப்பகுதி பொதுமக்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோர் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் பள்ளியை நிர்வகிக்கும் டயோசீசன் நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என வலியுறுத்தி நெல்லை மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு ஆகியோரை நேரில் சந்தித்து அப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளுடன் அந்த பெற்றோர்கள் இன்று புகார் மனு அளித்து ள்ளனர்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கும் அவர்கள் மனு அனுப்பி வைத்துள்ளனர்.