சிறார் நிதி-குழந்தைகள் உரிமைகள் விழிப்புணர்வு முகாம்
- சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சிறார் நிதி-குழந்தைகள் உரிமைகள் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
- கேந்திர வித்யாலயா பள்ளி மாணவ-மாணவிகள் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சிவகங்கை கேந்திர வித்யாலயா பள்ளியில் சிறார் நிதி மற்றும் குழந்தைகள் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் சார்பு நீதிபதி பரமேசுவரி தலைமையில் நடந்தது.
முகாமில் அவர் பேசியதாவது:-
மாணவர்கள் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். இன்றைய மாணவர்கள் தன்னைவிட வேறு ஆள் இல்லை என்பது போன்ற தவறான புரிதல் மூலம் தங்களை வீணாக்கி கொள்வதுடன், பெற்றோர்களுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தி விடுகிறார்கள்.
மாணவர் சமுதாயம் சீரழிந்து வருவதை தடுக்கும் வகையில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பல்வேறு விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறது. மாணவர்கள் சிறந்த முறையில், ஒழுக்கத்துடன் நல்ல முறையில் கல்வி கற்று சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைந்து, சமுதாயத்தில் ஒவ்வொருவரும் தனித்தன்மையில் சேவை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முகாமில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்த், யோகா மருத்துவர் தங்கம், உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணக்குமார், பள்ளி முதல்வர் ஜான் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கேந்திர வித்யாலயா பள்ளி மாணவ-மாணவிகள் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.