உள்ளூர் செய்திகள்

களக்காட்டில் தெருவில் ஓடும் சாக்கடை நீர்- நோய் பரவும் அபாயம்

Published On 2023-10-28 09:06 GMT   |   Update On 2023-10-28 09:06 GMT
  • மிஷின் பள்ளிக்கூட தெருவில் சாக்கடை நீர் செல்ல வாறுகால் அமைக்கப்படவில்லை.
  • மழைக்காலங்களில் தெருவே சகதிமயமாகி விடுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

களக்காடு:

களக்காடு நகராட்சி 15-வது வார்டுக்குள்பட்ட மிஷின் பள்ளிக்கூட தெருவில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இத்தெருவில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு மற்றும் சாக்கடை நீர் செல்ல வாறுகால் வசதி அமைக்கப்படவில்லை. இதனைதொடர்ந்து கழிவு நீர் மற்றும் சாக்கடை நீர் தெருவிலேயே ஆறு போல் ஓடுகிறது. சாக்கடை நீருக்குள் இறங்கி தான் பொதுமக்கள் நடந்து செல்ல வேண்டியதுள்ளது. மேலும் அதில் கொசுக்கள் மற்றும் பூச்சிகளும் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய்களை பரப்பி வருவதாகவும் புகார் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். சாக்கடைக்குள் குடிநீர் குழாயும் அமைக்கப்பட்டுள்ளது.

மழைக்காலங்களில் சாக்கடை நீருடன், மழைநீரும் கலந்து விடுவதால் தெருவே சகதிமயமாகி விடுவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். அத்துடன் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. இதுபற்றி அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், தெருவில் சாக்கடை நீர் தேங்குவது பற்றி பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பலன் இல்லை. எனவே இனிமேலாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு வாறுகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

Tags:    

Similar News