சேலம் அரசு மருத்துவ கல்லூரியில் 100 எம்.பி.பி.எஸ் சீட் சேர்க்கை தொடர தேசிய மருத்துவ ஆணையம் அங்கீகாரம்
- இந்திய மருத்துவக்கழகம் 3 ஆண்டுக்கு ஒருமுறை ஆய்வு
- 100 எம்.பி.பி.எஸ் சீட் சேர்க்கை தொடர சேலம் அரசு மருத்துவக்கல்லூரிக்கான அங்கீகாரத்தை புதுப்பித்தது
சேலம்:
சேலம் அரசு மருத்துவக்கல்லூரி 75 எம்.பி.பி.எஸ் சீட் சேர்க்கையுடன் கடந்த 1990-ல் பயன்பாடுக்கு வந்தது. அப்போதைய இந்திய மருத்துவக்கழகம் 3 ஆண்டுக்கு ஒருமுறை ஆய்வு செய்து, உரிமம் புதுப்பிக்கப்பட்டு மருத்துவக் கல்லூரிக்கான அங்கீகாரம் வழங்கி வந்தது.
இந்த நிலையில், 2013 -ம் ஆண்டு ஜூலை மாதம் 14-ந்தேதி எம்.பி.பி.எஸ் சீட் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்தியதோடு, 3 ஆண்டுக்கான ஆய்வு 2018-ல் 5 ஆண்டாக மாற்றியமைக்கப்பட்டது. அதே நேரம், இந்திய மருத்துவ கழகம், தேசிய மருத்துவ ஆணையமாக மாற்றம் செய்யப்பட்டது.
அதன்படி 5 ஆண்டுக்கான ஆய்வு, கடந்த மார்ச் மாதம் முடிந்த நிலையில் அதற்கு முன்னதாகவே, தேசிய மருத்துவ ஆணைய உறுப்பினர்கள் சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் அடுத்தடுத்து ஆய்வு மேற்கொண்டனர். அதன் அறிக்கையை பெற்ற ஆணையம், 2028 -ம் ஆண்டு மார்ச் வரை, 100 எம்.பி.பி.எஸ் சீட் சேர்க்கை தொடர சேலம் அரசு மருத்துவக்கல்லூரிக்கான அங்கீகாரத்தை புதுப்பித்து, உத்தரவிட்டுள்ளது.