சேலத்தில் சில்லி சிக்கனில் கரப்பான் பூச்சிஉணவு பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை
- சேலம் சன்னியாசி குண்டு பகுதியில் சில்லி சிக்கன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.
- வாடிக்கையாளர் ஒருவர் சுடச்சுட பொறித்த சில்லி சிக்கனை வாங்கி சாப்பிட்டார். அப்போது அந்த சில்லி சிக்கனில் கரப்பான் பூச்சி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
சேலம்:
சேலம் சன்னியாசி குண்டு பகுதியில் சில்லி சிக்கன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு சென்ற வாடிக்கையாளர் ஒருவர் சுடச்சுட பொறித்த சில்லி சிக்கனை வாங்கி சாப்பிட்டார். அப்போது அந்த சில்லி சிக்கனில் கரப்பான் பூச்சி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
வாக்குவாதம்
கரப்பான் பூச்சியை கோழிக்கறியுடன் சேர்த்து பொறித்தது தெரிய வந்தது. இது குறித்து வாடிக்கையாளர் கடையின் உரிமையாளரிடம் கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து தகவல்அறிந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த அந்த கடைக்கு சென்றனர். அப்போது அந்த சில்லி சிக்கன் கடையை பூட்டி விட்டு அவர் தலைமறைவானது தெரிய வந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி இன்று கடையை திறக்குமாறு கூறி உள்ளனர். மேலும் இன்று கடைக்கு சென்று விசாரணை நடத்த உள்ளனர். விசாரணை முடிவில் கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க படும் என தெரிவித்தனர்.