உள்ளூர் செய்திகள்

தேனீர் வைத்தபோது உடலில் தீப்பிடித்து பட்டதாரி இளம்பெண் கருகி பலி

Published On 2023-10-26 10:43 GMT   |   Update On 2023-10-26 10:43 GMT
  • வனிதா பி.காம் பட்டப்படிப்பை முடித்து விட்டு 3 ஆண்டுகளாக வீட்டில் இருந்து வந்துள்ளார்.
  • மாலை 4.30 மணிக்கு வீட்டில் யாரும் இல்லாதபோது சமையல் அறையில் தேனீர் வைக்க வனிதா சென்றபோது திடீரென சத்தமிட்டுள்ளார்.

சங்ககிரி:

சேலம் மாவட்டம் சின்னாக்கவுண்டனூர் கிராமம் கோபாலனூர் கருவறையான் காட்டை சேர்ந்தவர் சீனிவாசன், விவசாயி. இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், பிரபு (27) என்ற மகனும், வனிதா (23) என்ற மகளும் உள்ளனர்.

வனிதா பி.காம் பட்டப்படிப்பை முடித்து விட்டு 3 ஆண்டுகளாக வீட்டில் இருந்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில் நேற்று மாலை 4.30 மணிக்கு வீட்டில் யாரும் இல்லாதபோது சமையல் அறையில் தேனீர் வைக்க வனிதா சென்றபோது திடீரென சத்தமிட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் பெற்றோர்கள் ஓடி வந்து பார்த்துள்ளனர். அப்போது உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்த நிலையில் வனிதா உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சங்ககிரி போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி, சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் சேலம் மாவட்ட தீயணைப்பு அலுவலர் வேலு, நிலைய அலுவலர் அருள்மணி மற்றும் மீட்பு படையினர் சமையல் அறையில் தண்ணீர் அடித்து கருகிய நிலையில் இருந்த வனிதாவின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வனிதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து சங்ககிரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் வனிதா சமைத்தபோது கியாஸ் கசிவினால் இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News