பைனான்ஸ் அதிபர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு
- ராஜாமுத்தையா (55). இவர் தனது மனைவி கீதா (42) என்பவருடன் அதே பகுதியில் ஜவுளி கடை நடத்தி வருகிறார்.
- ஒரு மாதம் கழித்து ராஜாமுத்தையாவை அழைத்த அவர் மீண்டும் வட்டி பணம் ரூ.24 ஆயிரத்து 500 கேட்டதாக தெரிகிறது.
சேலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜாமுத்தையா (55). இவர் தனது மனைவி கீதா (42) என்பவருடன் அதே பகுதியில் ஜவுளி கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் வியாபாரத்திற்காக கடந்த ஜூலை 30-ந் தேதி தாரமங்கலத்தில் பைனான்ஸ் நடத்தி வரும் ஒருவரிடம் ரூ. 1 லட்சம் கடனாக கேட்டதாகவும், அதற்கு அவர் 15 நாட்களுக்கு ரூ.13 ஆயிரத்து 500 வட்டியை எடுத்துக்கொண்டு மீதி ரூ. 86 ஆயிரத்து 500-ஐ கொடுத்ததாகவும் தெரிகிறது. அதன்பிறகு ஒரு மாதம் கழித்து ராஜாமுத்தையாவை அழைத்த அவர் மீண்டும் வட்டி பணம் ரூ.24 ஆயிரத்து 500 கேட்டதாக தெரிகிறது. அப்போது ராஜாமுத்தையா கையில் இருந்த ரூ.10 ஆயிரத்தை கொடுத்துள்ளார். இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி இரவு 7 மணியளவில் பைனான்ஸ் அதிபர் உட்பட 10 பேர் ஜவுளி கடைக்கு சென்று அங்கிருந்த துணிகளை அள்ளிக்கொண்டு கடையை இழுத்து மூடி பூட்டு போட்டு சென்றதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜா முத்தையா மற்றும் அவரது மனைவி கீதா ஆகியோர் அதிக வட்டி கேட்டு துன்புறுத்தி வரும் பைனாஸ் அதிபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தாரமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் பைனான் அதிபர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.