உள்ளூர் செய்திகள்

தேயிலை தோட்டங்களில் யானைகள் முகாம்

Published On 2026-03-07 17:15 IST   |   Update On 2026-03-07 17:15:00 IST
  • கோடைக்காலம் காரணமாக வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது.
  • வேலை பார்க்கும் தொழிலாளர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டு உள்ளது.

குன்னூர்:

நீலகிரி மாவட்டத்தில் 55 சதவீதம் வனப்பகுதியை உள்ளடக்கியது. இங்கு காட்டு யானைகள், புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன.

கோடைக்காலம் காரணமாக வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் அங்குள்ள ஒருசில வனவிலங்குகள் உணவு மற்றும் குடிநீர் தேடி மலையடிவார குடியிருப்பு பகுதிகளுக்கு அடிக்கடி வந்து செல்கின்றன. இதனால் அந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் கெத்தை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 காட்டு யானைகள் குன்னூர் அருகே உள்ள கொலகம்பை, குன்னக்கம்பை, கோடேரி, கிரேக்மோர், எஸ்டேட், சட்டன், கிளிஞ்சடா ஆகிய பகுதிகளில் முகாமிட்டு உள்ளன.

இந்த யானைகள் பகல் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் அங்குள்ள தேயிலை தோட்டத்துக்குள் சுற்றிதிரிகின்றன. இதனால் அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வுமேற்கொண்டனர். பின்னர் வனத்துறைசார்பில் 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த குழுவினர் அந்த பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் கெத்தை பகுதியில் முகாமிட்டு உள்ள யானைகளை அடர்வனப்பகுதிக்கு விரட்டும் பணிகளும் நடைபெறுகின்றன.

இதற்கிடையே கெத்தை பகுதியில் யானைகள் நடமாட்டம் காணப்படுவதால் அங்குள்ள தேயிலை தோட்டங்களில் வேலைபார்க்கும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

மேலும் இரவு நேரங்களில் வெளியே சென்று வருவதைதவிர்க்க வேண்டும் என்றுவனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News