சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபோது எடுத்தபடம்.
கடலூர் அருகே குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி சாலை மறியல்: பண்ருட்டி தாசில்தார் பேச்சுவார்த்தை
- அதிகாரிகள் சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
- உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
கடலூர்:
கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு எஸ். புதுக்கு ப்பத்தில் குட்டையாண்டி குளம் உள்ளது. இந்தக் குளம் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை எஸ்.புதுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நடுவீரப்பட்டு - சத்திரம் சாலையில் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோஷங்களை எழுப்பினர்.
தகவல் அறிந்த நடுவீரப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பண்ருட்டி தாசில்தார் ஆனந்தி மற்றும் வருவாய் துறையினரும் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அளவீடு செய்து குளத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதில் அளித்த தாசில்தார் ஆனந்தி உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.