தமிழ்நாடு செய்திகள்

#TNAssemblyElection த.வெ.க.வுடன் கூட்டணியா?- டாக்டர் ராமதாஸ் இன்று முக்கிய ஆலோசனை

Published On 2026-03-05 12:30 IST   |   Update On 2026-03-05 12:30:00 IST
  • தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பா.ம.க.வை சேர்த்தால் நாங்கள் வெளியேறிவிடுவோம் என தெரிவித்தனர்.
  • யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து டாக்டர் ராமதாஸ் இந்த அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

திண்டிவனம்:

தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான கூட்டணி அமைக்கும் முயற்சியில் அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்த தேர்தலில் 4 முனை போட்டி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளின் தலைமையில் கூட்டணி ஏற்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. 234 தொகுதிகளுக்கும் அக்கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர். விஜய் தலைமையிலான த.வெ.க. தனித்து போட்டியிடுமா அல்லது அந்த கட்சியுடன் வேறு கட்சி கூட்டணியில் இணையுமா என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பா.ம.க.வில் டாக்டர் ராமதாஸ் ஒரு அணியாகவும், அவரது மகன் அன்புமணி மற்றொரு அணியாகவும் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இருவரும் மாம்பழம் சின்னம் தங்களுக்கு தான் சொந்தம் என உரிமை கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் அன்புமணி தலைமையிலான பா.ம.க., அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து விட்டது. அன்புமணிக்கு அ.தி.மு.க. கூட்டணியில் மேல்சபை எம்.பி. பதவி வழங்கப்பட்டுள்ளது.

ராமதாஸ் தலைமையிலான பா.ம.க.வினர் தி.மு.க. கூட்டணிக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பா.ம.க.வை சேர்த்தால் நாங்கள் வெளியேறிவிடுவோம் என தெரிவித்தனர். இதனால் ராமதாஸ் எந்த அணியில் இணைவார் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

இதனிடையே திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டியளித்த டாக்டர் ராமதாஸ் 3 நாட்களில் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். இந்த 3 நாட்களும் தமிழக அரசியல் பரபரப்பாக இருக்கும் என தெரிவித்தார்.

இந்த நிலையில் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் இன்று முக்கிய நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து டாக்டர் ராமதாஸ் இந்த அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுடன் பா.ம.க. கூட்டணியை உறுதி செய்ய முடியாத நிலையில் த.வெ.க.வுடன் கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. த.வெ.க. கூட்டணியில் ராமதாஸ் தரப்புக்கு 35 தொகுதிகள் ஒதுக்க இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த தொகுதிகளில் போட்டியிட உள்ள முக்கிய நிர்வாகிகளை அழைத்து ராமதாஸ் ஆலோசனை நடத்துவதாக தெரிகிறது. எனவே, கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News