கூடலூரில் வெள்ளப்பெருக்கால் பாலம் உடையும் அபாயம்
- கூடலூர் பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தொடர் கனமழை பெய்தது.
- பொதுமக்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
ஊட்டி
கூடலூர் பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தொடர் கனமழை பெய்தது. இதனால் நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது
தொடர்ந்து மங்குலி, தோட்டமூலா உள்பட 5 இடங்களில் பாலம் உடைந்து விழுந்தது. இதேபோல் கூடலூர் ஆனைசெத்த கொல்லியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அப்பகுதியில் உள்ள சிமெண்டு பாலத்தின் இருபுறமும் மண் அரிப்பு ஏற்பட்டது. தற்போது பாலம் உடைந்து விழும் நிலையில் உள்ளது.
இருப்பினும் அந்த வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக இரவில் வெளியூர் பயணிகள் வாகனங்களில் வரும்போது விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆற்றுவாய்க்காலில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் பாலத்தின் அடிப்பாகம் வலுவிழந்து வருகிறது. இதனால் சாலை துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது.
எனவே, அசம்பாவிதம் நடைபெறும் முன் பாலத்தின் இருபுறமும் மண் அரிப்பு ஏற்படாத வகையில் தடுப்புச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால் பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிக்கப்படும் நிலை ஏற்படும்.
இதனால் பொதுமக்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.