சென்னை-புறநகரில் விடிய விடிய மழை: ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
- வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
- பல இடங்களில் சாலைகள் முழுவதும் தண்ணீரில் மூழ்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இரவிலும், அதிகாலையிலும் பனியின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பரவலாக விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று அதிகாலை திடீரென பலத்த மழைகொட்டியது. பின்னர் மழை ஓய்ந்து இருந்த நிலையில் நேற்று மாலை முதல் மீண்டும் சாரல் மழையாக நீடித்தது. பின்னர் இரவு கனமழையாக கொட்டித்தீர்த்தது. இரவு முழுவதும் விடிய,விடிய மழை பெய்தது.
நேற்றுஇரவு பெய்த பலத்த மழையின் காரணமாக கோயம்பேடு மேம்பாலம், மதுரவாயல் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன. கனமழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இன்று காலை முதல் சில இடங்களில் விட்டு விட்டு சாரல் மழை நீடித்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
திருமழிசை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வெள்ளவேடு, நசரத்பேட்டை உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. நீண்ட நேரமாக இடைவிடாமல் பெய்த மழையால் தாழ்வான இடங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. தொடர் கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளப்பெருக்கெடுத்து ஆறுபோல் ஓடியது. பல இடங்களில் சாலைகள் முழுவதும் தண்ணீரில் மூழ்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.
அப்பகுதியில் மழைநீர் வடிகால் வசதி போதிய அளவில் இல்லாததே தண்ணீர் பாதிப்பிற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். உடனடியாக மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதேபோல் திருவள்ளூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் சாரல் மழை நீடிக்கிறது.
நேற்று காலை முதல் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக சென்னை குடிநீர் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இன்று காலை நிலவரப்படி புழல் ஏரிக்கு 210 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கனஅடி. இதில் தற்போது 3078 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரியில் இருந்து குடிநீர் தேவைக்கு 184 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது.
இதேபோல் சோழவரம் ஏரிக்கு 71 கனஅடி தண்ணீர் வருகிறது. மொத்த கொள்ளளவான 1081 மி.கன அடியில் 518 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு 50 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. மொத்த கொள்ளளவான 3645 மி.கன அடியில் 3432 மி.கன அடி தண்ணீர் உள்ளது. பூண்டி ஏரிக்கு 50 கனஅடி தண்ணீர் வருகிறது. ஏரி முழு கொள்ளளவான 3231 மி.கனஅடி முழுவதும் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.