பழனி கோவிலில் இன்று தைப்பூசத்திருவிழா கொடியேற்றம்: பிப்.1-ந்தேதி தேரோட்டம்
- தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வாக வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமிக்கு வருகிற 31-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
- 4 ரத வீதிகளிலும் முத்துக்குமார சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூசம் முதன்மையானதாகும்.
இந்த திருவிழாவின் முக்கிய அம்சமே பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்வதுதான். அதன்படி இந்த வருடத்துக்கான தைப்பூசத்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனை முன்னிட்டு பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி கொடிக்கட்டி மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். சிறப்பு பூஜைகளுக்கு பின்பு காலை 9.30 மணிக்கு மேல் கொடியேற்றத்துக்கான விழா தொடங்கியது.
வேல், மயில், சேவல் உருவம் பொறித்த மஞ்சள் நிற கொடிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு கோவில் உட்பிரகாரமாக வலம் வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோவில் கொடி மரத்தில் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது.
அப்போது கூடியிருந்த பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி தண்டாயுதபாணி சுவாமியை வழிபட்டனர். விழாவை முன்னிட்டு இன்று இரவு புதுச்சேரி சப்பரத்தில் சுவாமி வீதிஉலா நடைபெற உள்ளது. 10 நாட்கள் நடைபெறும் தைப்பூச விழாவில் வெள்ளி ஆட்டுக்கிடா, காமதேனு, யானை, தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.
தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வாக வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமிக்கு வருகிற 31-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று மாலை வெள்ளித் தேரோட்டம் ரத வீதிகளில் நடைபெறும். மணக்கோலத்தில் முத்துக்குமார சுவாமி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மறுநாள் (பிப்ரவரி 1-ந் தேதி) தேரோட்டம் நடக்கிறது. அன்று அதிகாலை 5 மணிக்கு தோளுக்கினியாளில் சண்முக நதியில் எழுந்தருளி தீர்த்தம் வழங்கும் நிகழ்வும், மாலை 4 மணிக்கு திருத்தேரேற்றம் மற்றும் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கும் தேரோட்டம் நடக்கிறது.
4 ரத வீதிகளிலும் முத்துக்குமார சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். பிப்ரவரி 2-ந் தேதி இரவு 8 மணிக்கு தங்க குதிரை வாகனத்திலும், மறுநாள் 3-ந் தேதி இரவு 9 மணிக்கு பெரிய தங்கமயில் வாகனத்திலும் வீதி உலா நடைபெறும். பிப்ரவரி 4-ந் தேதி தெப்பத்தேர் திருவிழாவுடன் கொடி இறக்கம் நடைபெற்று தைப்பூசத்திருவிழா நிறைவுபெறும்.
தைப்பூசத்தை முன்னிட்டு தற்போதே பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் பழனி கோவிலுக்கு குவிந்த வண்ணம் உள்ளனர். இன்று அதிகாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்த நிலையிலும் பழனி கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். மலைக்கோவிலில் நீண்ட வரிசையில் அவர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
வரும் நாட்களில் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதால் 30-ந் தேதி முதல் பிப்ரவரி 3-ந் தேதி வரை 5 நாட்களுக்கு மலைக்கோவிலில் நடைபெறும் தங்கரத புறப்பாடு இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
4-ந் தேதி முதல் வழக்கம் போல் தங்கரத புறப்பாடு நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.