உள்ளூர் செய்திகள்

உடுமலை ராமசாமிநகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் நியமிக்க கோரிக்கை

Published On 2023-02-12 07:51 GMT   |   Update On 2023-02-12 07:51 GMT
  • செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை.
  • 25 லட்ச ரூபாய் செலவில் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது.

உடுமலை :

திருப்பூர் மாவட்டம் உடுமலை ராமசாமி நகரில் கட்டப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா முடிந்தும் டாக்டர்கள் மருத்துவ பணியாளர் நியமிக்கப்படாமல் கட்டடம் காட்சிப்பொருளாக மாறி வருகிறது.

உடுமலை நகராட்சியில் 33வது வார்டுகளில் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர் .மக்களின் அடிப்படை மருத்துவம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய திட்டங்களுக்காக நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் வக்கீல் நாகராஜன் வீதியில் செயல் படுகிறது.

அங்கு தினமும் நூற்றுக்கணக்கான கர்ப்பிணிகள், தாய்மார்கள் வருவதால் இடம் நெருக்கடி ஏற்படுகிறது. நகரின் தெற்கு பகுதியில் 14 வார்டுகளில் வசிக்கும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வர வேண்டி உள்ளது.

எனவே தெற்கு பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். ராமசாமி நகரில் 25 லட்ச ரூபாய் செலவில் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது.

பணி முடிந்து கடந்த 2 மாதத்திற்கு முன் கட்டிடத்திற்கு திறப்பு விழா நடத்தப்பட்டது .ஆனால் இதுவரை நகரப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் சுகாதார நிலையம் செயல்படாமல் உள்ளது

இது குறித்து சுகாதார துறையினர் கூறுகையில், நகர்ப்புற ஆரம்பசுகாதார நிலையங்களுக்கென அரசு உத்தரவு அடிப்படையில் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். பணி நியமனத்துக்கான உத்தரவு எதுவும் இதுவரை அரசால் வழங்கப்படவில்லை என்றனர்.

Tags:    

Similar News