உள்ளூர் செய்திகள்

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு ஆர்வமுடன் சென்ற மாணவ-மாணவிகள்

Published On 2022-06-13 09:32 GMT   |   Update On 2022-06-13 09:32 GMT
  • ஆர்வமுடன் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு சென்றனர்.
  • இனிப்புகள் கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்பு.

நெல்லை:

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பின்னர் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று பள்ளிகள் திறப்பையொட்டி ஆர்வமுடன் வந்த மாணவ-மாணவிகளை ஆசிரியர்கள் பூங்கொத்து கொடுத்தும், இனிப்புகள் வழங்கியும் வரவேற்றனர்.

நெல்லை மாவட்டத்தில் 1,217 தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளும், 318 உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டது. காலை முதலே பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகள் வரத்தொடங்கினர்.

அவர்களை பள்ளி நுழைவு வாயிலில் நின்று ஆசிரியர்கள் வரவேற்றனர். கொரோனா வழிகாட்டுதலின்படி அனைத்து மாணவ-மாணவிகளும் சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்தனர். பின்னர் தங்களது வகுப்பறைகளுக்கு சென்றனர்.

ஏற்கனவே அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளுக்கு புத்தகங்கள், நோட்டுகள் அனுப்பிவைக்கப்பட்டு விட்டது. இதனால் இன்று பள்ளி திறந்ததும் மாணவ-மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள ஒருசில பள்ளிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி ஆய்வு செய்தார்.

தென்காசி மாவட்டத்தில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் என மொத்தம் 1,289 பள்ளிகள் உள்ளன. அவை அனைத்திலும் ஏற்கனவே சுத்தம் செய்யும் பணிகள் முழுமை அடைந்து விட்டது.

இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளை ஆசிரியர்களும் உற்சாகமாக வரவேற்றனர். முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், காய்ச்சல் பரிசோதனை உள்ளிட்டவை செய்யப்பட்ட பின்னரே வகுப்பறைக்குள் மாணவர்களை அனுமதித்தனர்.

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ-மாணவிகள் தங்களுடைய உடைகள், வாலி உள்ளிட்ட பொருட்களை சுமந்து வந்தனர். அவர்களது பெற்றோரும் அவர்களுடன் பள்ளிவரை வந்து வழியனுப்பி சென்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள் என மொத்தம் 1,870 பள்ளிகள் உள்ளன. கோடை விடுமுறைக்கு பின்னர் அவை இன்று திறக்கப்பட்டதால் ஏராளமான குழந்தைகள் பள்ளிக்கு வர மறுத்து அழுது அடம்பிடித்தன. சில குழந்தைகள் சாலையில் அழுது உருண்டதையும் காணமுடிந்தது.

பெரும்பாலான பள்ளிகளில் சீருடைகள், உபகரணங்கள் உள்ளிட்டவை வந்து சேரவில்லை. இதனால் அடுத்த 20 நாட்களுக்குள் அவை வந்ததும் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டுவிடும் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News