உள்ளூர் செய்திகள்

விவசாய பணிகளில் தீவிரம் காட்டும் விவசாயிகள்

Published On 2022-08-04 13:52 IST   |   Update On 2022-08-04 13:52:00 IST
  • விவசாய பணிகளில் தீவிரமாக விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்
  • தொடர் மழை காரணமாக நடைபெறுகிது

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருவதையடுத்து, விவசாயிகள் தங்களது விவசாயப் பணிகளை மும்மரமாக தொடங்கியுள்ளனர்.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக, மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. அதனையடுத்து ஜூன் மாதம் 12-ம் தேதி திறக்க வேண்டிய தண்ணீரை, தமிழக முதல்வர் அதற்கு முன்பாகவே திறந்து வைத்தார்.

இதனால் கல்லணைக்கால்வாய் கடைமடை பகுதி விவசாயிகள் கடந்த மாதமே தங்களது விவசாய பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் மானாவாரி விவசாயிகள் போதிய மழை இல்லாமல் விவசாய பணிகளை மேற்கொள்ளாமல் காத்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது கடந்த சில நாட்களாக மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் மானாவாரி பகுதி விவசாயிகளும் விவசாய பணிகளை தொடங்கியுள்ளனர். முன்பொரு காலத்தில் மானாவாரி பகுதியாக இருந்தாலும் ஏரி, கண்மாய்களில் தண்ணீர் சேமிக்கப்பட்டு, அதன் மூலம் நாற்று விடும் முறையில் விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக உரிய காலத்தில் மழை பெய்யாததால், விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு முறையை கையாண்டு வருகின்றனர்.

இந்தாண்டு உரிய காலத்தில் மழை பெய்யத் தொடங்கினாலும் பள்ளத்திவயல், பாக்குடி, செட்டிவயல், ஊர்வணி உள்ளிட்ட பலவேறு பகுதிகளில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு முறையிலேயே விவசாயத்தைத் தொடங்கியுள்ளனர்.

Tags:    

Similar News