தியேட்டர் மேலாளரை அரிவாலாள் வெட்டிய 2 பேர் கைது
- தியேட்டர் மேலாளரை அரிவாலாள் வெட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
- ஓசியில் படம் பார்க்க வந்தவர்களை தடுத்ததால் ஆத்திரம்
புதுக்கோட்டை பழனியப்பா கார்னர் பகுதியில் ஒரு தியேட்டர் செயல்பட்டு வருகிறது. இதில் இரவு காட்சிக்கு காந்தி நகர் இரண்டாவது வீதியை சேர்ந்த முகிலன் (வயது 28 ).காமராஜபுரம் 9வது வீதியை சேர்ந்த விக்னேஷ் (28) ஆகிய இருவரும் சென்றனர். பின்னர் அவர்கள் டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் எடுக்காமல் நேராக தியேட்டருக்குள் நுழைய முயன்றனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தியேட்டர் ஊழியர் சம்பத் அவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தினார.
அதைத்தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முகிலனும், விக்னேஷும் அந்த தியேட்டரின் மேலாளர் மணிகண்டனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடினர். இதில் அவரது தோள்பட்டை மற்றும் முதுகு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. தியேட்டர் ஊழியர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் புதுக்கோட்டை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து முகிலன், விக்னேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர். ஓசியில் படம் பார்க்க சென்று அனுமதி மறுத்த காரணத்தால் தியேட்டர் மேலாளரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.