உள்ளூர் செய்திகள்

ஊட்டி- கோத்தகிரியில் போலீசார் கொடி அணிவகுப்பு

Published On 2022-08-30 10:03 GMT   |   Update On 2022-08-30 10:03 GMT
  • போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் என 1500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
  • 500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.

அரவேணு

விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்பட உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் ஊட்டி நகர பகுதிகள், கூடலூர், பந்தலூர், குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 315 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.

ஊட்டியில் பூசாரிகள் பேரவை சார்பில் 40, சிவசேனா சார்பில் 15, கோத்தகிரியில் அனுமன் சேனா சார்பில் 30 என மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. இதுதவிர பல்வேறு கிராம பகுதிகளில் பொதுமக்கள் சார்பில் சிலைகள் வைக்கப்பட உள்ளன.

பூசாரிகள் பேரவை சார்பில் வருகிற 3-ந் தேதியும், மாவட்டம் முழுவதும் 4-ந் தேதியும் விநாயகர் சிலை ஊர்வலங்கள் நடைபெற உள்ளன.

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தமிழ்நாடு சிறப்பு காவல்படை போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் என 1500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் வெளி மாவட்ட போலீசாரும் நீலகிரிக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் ஊட்டி, கூடலூர், கோத்தகிரி, குன்னூர், பந்தலூர் ஆகிய பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் ஊட்டி, கோத்தகிரி உள்ளிட்ட இடங்களில் கொடி அணிவகுப்பு நடத்தினர். ஊட்டியில் தாவரவியல் பூங்கா சாலையில் தொடங்கிய கொடி அணிவகுப்பு, சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, அப்பர் பஜார், மெயின் பஜார் வழியாக மத்திய பஸ்நிலையத்தை அடைந்தது. கோத்தகிரி டானிங்டன் பகுதியில் வஜ்ரா வாகனத்துடன் தொடங்கிய கொடி அணிவகுப்பு காமராஜர் சதுக்கம், ராம்சந்த் சதுக்கம், மார்க்கெட் சாலை வழியாக சென்று பஸ் நிலையத்தை அடைந்தது. குன்னூரில் சிம்ஸ் பூங்கா பகுதியில் தொடங்கிய கொடி அணிவகுப்பு லாலி ஆஸ்பத்திரி கார்னர், மவுண்ட் ரோடு வழியாக பஸ்நிலையம் வரை நடந்தது. இதில் போலீசார் துப்பாக்கி ஏந்தியபடி சென்றனர்.

Tags:    

Similar News