உள்ளூர் செய்திகள்

குன்னூரில் இதமான காலநிலை: சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

Published On 2023-11-20 14:52 IST   |   Update On 2023-11-20 14:52:00 IST
  • காட்சி முனைக்கு சென்று கிடுகிடு பள்ளத்தாக்கு, நீர்வீழ்ச்சிகளை பார்வையிட்டு மகிழ்ச்சி
  • பகல் நேரத்தில் பனிமூட்டமும் அதிகரித்து இருப்பதால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றன

அருவங்காடு,

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் தற்போது வெண்மையான மேகமூட்டமும். லேசான சாரல் மழையும், இதமான குளிர்ச்சியும் நிலவுகிறது.

எனவே தீபாவளி விடுமுறை முடிந்த நிலையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மராட்டிய மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள், குன்னூர் பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்து செல்கின்றனர்.

குன்னூரில் உள்ள லாம்ஸ்ராக் பகுதியில் உள்ள காட்சி முனைக்கு சென்று கிடுகிடு பள்ளத்தாக்கு, ராட்சத பாறைகள், பெண் உறங்குவது போல அமைந்திருக்கும் மலைகள், நீர்வீழ்ச்சிகளை பார்வையிட்டு புகைப்படம் எடுத்து கொள்கின்றனர்.

தொடர்ந்து அங்கு நிலவும் இதமான தட்பவெப்ப நிலையை அனுபவித்து மகிழ்ந்து வருகின்றனர். குன்னூரில் அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது.

பகல் நேரத்தில் பனிமூட்டமும் அதிகரித்து இருப்பதால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மலைப்பாதையில் செல்கின்றன.

Tags:    

Similar News