உள்ளூர் செய்திகள்

போதைப்பொருள் சம்பவத்தால் அதிமுக செயலாளர் கொலை நடைபெறவில்லை- எடப்பாடிக்கு மு.க.ஸ்டாலின் பதில்

Published On 2023-03-29 08:52 GMT   |   Update On 2023-03-29 10:33 GMT
  • காவல் துறையினர் இரவோடு இரவாக இரண்டு மணி நேரத்தில், வழக்கில் தொடர்புடைய 5 குற்றவாளிகளை கைது செய்துள்ளார்கள்.
  • கொலை செய்யப்பட்ட இளங்கோ, போதைப்பொருளுக்கு எதிராக இருந்ததாகச் சொல்லப்படுவது குறித்து விசாரணையில் இதுவரையில் தெரியவில்லை.

சென்னை:

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து அ.தி.மு.க. பெரம்பூர் தெற்கு பகுதி செயலாளர் இளங்கோவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பேசினார். அவர் கூறியதாவது:-

"கடந்த 27-ந்தேதி அன்று 5 பேர் கொண்ட கும்பல் இளங்கோவனை கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டதாகவும் கஞ்சா விற்பனை குறித்து அவர் போலீசில் புகார் செய்ததால் அந்த விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.

சென்னையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும் இதுபற்றி போலீசாருக்கு தகவல் சொல்பவர்கள் தாக்கப்படும் சம்பவம் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

அ.தி.மு.க. பெரம்பூர் தெற்கு பகுதி செயலாளர் இளங்கோவன் என்ற வியாசை இளங்கோ நேற்று முன்தினம் ஐந்து பேர் கொண்ட கும்பலால் கத்தியால் வெட்டப்பட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லும் வழியிலேயே இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டார்.

அவர் மனைவி சுமலதா கொடுத்த புகாரின் அடிப்படையில், செம்பியம் காவல் நிலையத்தில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், கொலையுண்ட இளங்கோ, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சஞ்சய் என்பவரை பொது வெளியில் வைத்து தாக்கியதாகவும், அந்த முன்விரோதம் காரணமாக சஞ்சய் இந்தக் கொலைத் திட்டத்தை தீட்டியுள்ளதும் தெரிய வந்தது.

காவல் துறையினர் இரவோடு இரவாக இரண்டு மணி நேரத்தில், வழக்கில் தொடர்புடைய சஞ்சய், கணேசன், கவுதம், வெங்கடேசன். அருண்குமார் ஆகிய 5 குற்றவாளிகளை கைது செய்துள்ளார்கள்.

இவர்களில் ஒருவர் இளஞ்சிறார் குற்றவாளி. மேலும், கொலை செய்யப்பட்ட இளங்கோ, போதைப்பொருளுக்கு எதிராக இருந்ததாகச் சொல்லப்படுவது குறித்து விசாரணையில் இதுவரையில் தெரியவில்லை.

இச்சம்பவம் குறித்த புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பதை எதிர்க்கட்சித்தலைவர் உள்ளிட்ட இங்கே உரையாற்றிய உறுப்பினர்கள் அனைவருக்கும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News