கோவையில் போக்குவரத்து விதி மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் கருவி
- ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் 6 தானியங்கி வேக அளவீடு கருவி பொருத்த முடிவு.
- 40 கி.மீ. வேகத்தை தாண்டிச் செல்லும் வாகனங்களுக்கு அபராதம்.
கோவை,
கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விதிமீறல்களை தடுக்கவும் மாநகர போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன்ஒருபகுதியாக கோவை மாநகரில் அவினாசி ரோடு, சக்தி ரோடு, மற்றும் பாலக்காடு ரோட்டில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் 6 தானியங்கி வேக அளவீடு கருவி பொருத்துவது என்று மாநகர போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
இதில் முதல் கட்டமாக கோவை-அவினாசி ரோட்டில் இந்தகருவி பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் 40 கி.மீ. வேகத்தை தாண்டிச் செல்லும் வாகனங்கள் காமிரா மூலம் கண்காணிக்கப்பட்டு, அவர்களுக்கு அபராதம் விதித்து ரசீது அனுப்பி வைக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் தானியங்கி வேக கட்டுப்பாடு அளவீடடு கருவிகள் பொருத்தப்படுவது வழக்கம். ஆனால் தமிழகத்தில் முதல்முறையாக கோவை மாநகரில் தானியங்கி வேக அளவீட்டு கருவி பொருத்தப்பட்டு உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.