உள்ளூர் செய்திகள்

பஸ்சில் படிக்கட்டு உடைந்து விழுந்துள்ளதை படத்தில் காணலாம்.

பாவூர்சத்திரத்தில் அரசு பஸ்சில் படிக்கட்டு உடைந்ததால் பயணிகள் தவிப்பு

Published On 2023-06-06 08:27 GMT   |   Update On 2023-06-06 08:27 GMT
  • பஸ்சின் பின்பக்க படிக்கட்டு வேகத்தடையில் பட்டு சேதமடைந்ததாக தெரிகிறது.
  • கை குழந்தைகளுடன் வந்திருந்தவர்கள் கொசு தொல்லையால் அவதி அடைந்தனர்.

தென்காசி:

தென்காசியில் இருந்து நெல்லைக்கு பாவூர்சத்திரம் வழியாக சென்று கொண்டிருந்த அரசு பஸ்சில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

வேகத்தடை

பாவூர்சத்திரம் ரெயில்வே மேம்பால பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடம் அருகே பஸ் வந்த போது சாலையின் நடுவே இருந்த வேகத்தடையில் பஸ் ஏறி இறங்கியது.

அப்போது பஸ்சின் பின்பக்க படிக்கட்டு வேகத்தடையில் பட்டு சேதமடைந்ததாக தெரிகிறது. இதனால் அந்த வழியே பயணிகள் ஏறவோ, இறங்கவோ முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் அந்த பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தில் இறக்கி விடப்பட்டனர். இதனால் ஆலங்குளம் மற்றும் நெல்லை ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பயணிகள் மாற்று பஸ்கள் இல்லாததால் வெகு நேரம் பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தின் முன்பு காத்திருந்தனர்.

இதில் பெண்கள் மற்றும் கை குழந்தைகளுடன் வந்திருந்தவர்கள் கொசு தொல்லையால் மிகவும் அவதி அடைந்தனர். நள்ளிரவு நேரத்தில் போதிய பஸ்கள் இயக்கப்படாததால் அவர்கள் அங்கேயே காத்திருந்தனர். இது குறித்து தென்காசி பணிமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சுமார் 1½மணி நேரத்திற்கு பின்னர் வந்த மாற்று பஸ் ஆனது பயணிகளை ஏற்றிக் கொண்டு நெல்லை நோக்கி சென்றது.

சமீப காலமாக அரசு பஸ்களில் ஏற்படும் பழுதுகளை முறையாக சரிசெய்யாமலும், பராமரிப்பு பணியை மேற்கொள்ளாமலும் சம்பந்தப்பட்ட பணிமனை ஊழியர்கள் அலட்சியம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நெல்லை- தென்காசி இடையே இயக்கப்பட்டு வரும் அரசு பஸ்களில் மேற்கூரைகள் அனைத்தும் சேதமடைந்த நிலையில் இயக்கப்பட்டு வருவதாகவும் மழை காலங்களில் பஸ் முழுவதும் தண்ணீர் ஒழுகுவதால் குடையுடனையே பயணிகள் பயணம் செய்யும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளதாக பயணிகள் வேதனை தெரிவித்தனர்.

Tags:    

Similar News