உள்ளூர் செய்திகள்

ஆக்கிரமிப்பு வீடுகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்தபோது எடுத்தபடம்.

சிதம்பரம் குருநமச்சிவாயர் மடத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி வீடுகளை இடித்து அகற்றிய அதிகாரிகள்

Published On 2023-10-31 07:33 GMT   |   Update On 2023-10-31 07:33 GMT
  • அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள 22 வீடுகளை காலி செய்ய உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
  • அப்புறப்படுத்த 2 ஜே.சி.பி. எந்திரங்களும் வரவழைக்கப்பட்டது.

கடலூர்:

சிதம்பரம் வேங்கான் தெருவில் உள்ள புகழ் பெற்ற குருநமச்சிவாயர் மடத்துக்குச் சொந்தமான இடத்தில் விநாயகர், ஆத்மநாதர், யோகாம்பாள், குருநமச்சிவாயர், மாணிக்க வாசகர் ஆகிய கோவில்கள் உள்ளன. இந்த மட வளாகத்தில் கோவில் அருகே உள்ள இடத்தை ஆக்கிரமித்து 22 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற உத்தரவிட உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதில் கோவில் வளாகத்தில் வழிபாட்டுக்கு இடையூறாக அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள 22 வீடுகளை காலி செய்ய உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து 8 வீடுகளின் உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மீதமுள்ள 14 வீடுகளை காலி செய்ய இந்து அறநிலையத் துறையினர் வருவாய் துறை மூலம் கடந்த ஜூலை மாதத்தில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

மேலும், வீடுகளில் வசிப்பவர்கள் 3 மாதத்திற்குள் காலி செய்ய வேண்டுமென நோட்டீசில் கூறப்பட்டிருந்தது. இதனை ஒரு சிலர் பெற மறுத்தனர். இதையடுத்து அந்த வீட்டின் கதவுகளில் அதிகாரிகள் நோட்டீசினை ஒட்டினர். இந்நிலையில் இந்த 14 வீடுகளை அப்புறப்படுத்த இந்து அறநிலையத் துறை துணை ஆணையர் சந்திரன், சிதம்பரம் தாசில்தார் செல்வக்குமார், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் ஆகியோர் இன்று காலை வந்தனர். இவர்களுடன் வருவாய்த் துறை ஊழியர்களும், 50-க்கும் மேற்பட்ட போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும், வீடுகளை அப்புறப்படுத்த 2 ஜே.சி.பி. எந்திரங்களும் வரவழைக்கப்பட்டது.

அங்கிருந்த வீடுகளில் வசித்தவர்கள் இதனை கண்டு, அதிகாரிகளுடன் வாக்குவாதத் தில் ஈடுபட்டனர். இதையடுத்து இந்து அறநிலையத் துறை துணை ஆணையர் சந்திரன், தன்னை பணி செய்ய விடாமல் தடுப்பதாக இன்ஸ்பெக்டர் ஆறுமுகத்திடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பொதுமக்களை அப்புறப்படுத்தி னர். இதையடுத்து வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்பு வீடுகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தி னர்.

Tags:    

Similar News