உள்ளூர் செய்திகள்

பாண்டமங்கலம் மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்

பாண்டமங்கலம் மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

Published On 2023-05-30 07:22 GMT   |   Update On 2023-05-30 07:22 GMT
  • பாண்டமங்கலத்தில் எழுந்தருளியுள்ள மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா, கடந்த 14-ந் தேதி காப்பு கட்டுதல் மற்றும் கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது.
  • தினந்தோறும் இரவு மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரங்களும் நடைபெற்றது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா, பாண்டமங்கலத்தில் எழுந்தருளியுள்ள மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா, கடந்த 14-ந் தேதி காப்பு கட்டுதல் மற்றும் கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது.

இதனை தொடர்ந்து 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை தினந்தோறும் இரவு மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரங்களும் நடைபெற்றது.

20-ந் தேதி பூச்சொரிதல் விழாவும், 21-ந் தேதி மறுக்காப்பு கட்டுதல் மற்றும் பூச்சொரிதல் விழாவும் நடைபெற்றது. 22-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை தினந்தோறும் இரவு அம்மன் சிங்க வாகனம், காமதேனு வாகனம், அன்னபட்சி மற்றும் காளை உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

28-ந் தேதி வடிசோறு மற்றும் மாவிளக்கு நிகழ்ச்சியும் இரவு குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று காலை மகா மாரியம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து உற்சவர் அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை திருத்தேரை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

தொடர்ந்து திருத்தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை அடைந்தது. இதில் பாண்டமங்கலம் பேரூராட்சித் தலைவர் டாக்டர் சோமசேகர், துணைத் தலைவர் முருகவேல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

இன்று மாலை தீமிதி விழாவும், நாளை பொங்கல், மாவிளக்கு நிகழ்ச்சியும், நாளை மறுநாள் காலை கிடா வெட்டுதலும் நடைபெறுகிறது.

2 மற்றும் 3-ந் தேதிகளில் மஞ்சள் நீராட்டு விழாவும், சாமி புறப்பாடும் நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பாண்டமங்கலம் மகா மாரியம்மன் கோவில் திருத்தேர் விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

Tags:    

Similar News