உள்ளூர் செய்திகள்

நாமக்கல்லில் உதவி கேட்ட பெண்ணிடம் ஏ.டி.எம். கார்டை வாங்கி ரூ.1.22 லட்சம் மோசடி

Published On 2023-07-20 12:52 IST   |   Update On 2023-07-20 12:52:00 IST
  • சரோஜா (51) மரூர்ப்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றார்.
  • அங்கிருந்த ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க முயற்சி செய்தார். ஆனால் பணம் வரவில்லை.

நாமக்கல்:

நாமக்கல் அருகே உள்ள மரூர்பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி சரோஜா (51). இவர் கடந்த 15-ந் தேதி மாலை மரூர்ப்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றார். அங்கிருந்த ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க முயற்சி செய்தார். ஆனால் பணம் வரவில்லை.

உதவி

அப்போது, ஏ.டி.எம். மையத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த நபர் ஒருவரிடம், தனது ஏ.டி.எம். கார்டை கொடுத்து பின் நம்பரையும் கூறி பணம் எடுத்துக் கொடுக்குமாறு உதவி கேட்டார். அந்த நபரும் ஏ.டி.எம். கார்டை எந்திரத்தில் போட்டுப் பார்த்து விட்டு, பணம் வரவில்லை என கூறியுள்ளார். மேலும் அவரது கையில் மறைத்து வைத்திருந்த மற்றொரு ஏ.டி.எம். கார்டை, சரோஜாவிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

மோசடி

சரோஜா வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அவரிடம் இருந்தது தனது ஏ.டி.எம். கார்டு இல்லை என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சரோஜா, வங்கிக்கு சென்று விசாரித்துள்ளார். அப்போது அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 22 ஆயிரத்து 500 பணம் எடுக்கப்பட்டு மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து சரோஜா நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து சரோஜாவிடம் ஏ.டி.எம். கார்டை மாற்றிக் கொடுத்து விட்டு பணத்தை எடுத்து மோசடி செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வந்தனர்.

கைது

ஏ.டி.எம் மையத்தில் இருந்த காமிரா பதிவுகள் மூலம் தீவிர விசாரணையில் ஈடுபட்ட பேலீசார், மோசடி சம்பவத்தில் ஈடுபட்டது நாமக்கல் கொசவம்பட்டியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சிவசண்முகம் (30) என்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து மேலும் இதுபோன்று யாரிடமாவது மோசடி செய்துள்ளாரா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News