ராமநத்தம் பகுதி கோவில்களில் உண்டியலை திருடி செல்லும் மர்மநபர்கள்
- இதில் அதிர்ச்சியடைந்த பூசாரி, இது குறித்து ஊர் பிரமுகர்களிடம் கூறினார்.
- உண்டியலில் ரூ.50 ஆயிரம் காணிக்கை பணம் இருக்கலாம் என புகாரில் கூறியுள்ளனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த வாகையூர் கிராமத்தில் அமைந்துள்ள செல்லியம்மன் கோவிலை வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு பூட்டி விட்டு பூசாரி வீட்டுக்கு சென்றார். நேற்று மாலை 4.30 மணி அளவில் கோவிலுக்கு வந்து பார்க்கும் போது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது கோயில் உன்டியலை காணவில்லை. இதில் அதிர்ச்சியடைந்த பூசாரி, இது குறித்து ஊர் பிரமுகர்களிடம் கூறினார். அவர்கள் இது குறித்து போலீசாரிடம் புகார் கொடுத்தனர். இதில் உண்டியலில் ரூ.50 ஆயிரம் காணிக்கை பணம் இருக்கலாம் என புகாரில் கூறியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே கோயிலில் இதற்கு முன்னர் திருட முயற்சித்த சம்பவம் நடந்துள்ளது. அதே நாளில் பொன்னியம்மன் கோவில் உண்டியலை உடைக்கவும் முயற்சி நடந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமநத்தம் அருகே பனையாந்தூர் திரவுபதி அம்மன் கோவில், ஆலம்பாடி அய்யனார் கோவில் உண்டியல்கள் திருடப்பட்டுள்ளது. இது தொடர்பான புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், வாகையூரில் உண்டியல் திருட்டு நடந்துள்ளது. ராமநத்தம் சுற்றுவட்டார பகுதி கோவில்களின் உண்டியலை திருடர்கள் குறி வைத்து கொள்ளை யடிக்கின்றனர். இவர்களை பிடிக்க முடியாமல் ராமநத்தம் போலீசார் திணறி வருகின்றனர். இதனால் பொதுமக்களிடையே அச்சம் நிலவுகிறது.