உள்ளூர் செய்திகள்

பாளை வ.உ.சி. சாலையில் வாலிபர் ஒருவர் வீலிங் சாகசம் செய்த காட்சி.

பாளை வ.உ.சி மைதானம் பகுதியில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் சாகசம் செய்யும் வாலிபர்கள் - போலீஸ் நடவடிக்கை பாய்கிறது

Published On 2022-08-21 09:17 GMT   |   Update On 2022-08-21 09:17 GMT
  • பாளை வ.உ.சி மைதானம் பின்புறம் அமைந்துள்ள சாலையில் இரவு நேரத்தில் ஏராளமான துரித உணவக கடைகள் அமைக்கப்படும்.
  • இங்கு வரும் இளம் பெண்களை கவரும் வகையில் வாலிபர்கள் சிலர் தினமும் சாலையில் மோட்டார் சைக்கிளில் வீலிங் சாகசம் என்ற பெயரில் ஆபத்தான வகையில் இருசக்கர வாகனம் ஓட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நெல்லை:

பாளை வ.உ.சி மைதானம் பின்புறம் அமைந்துள்ள சாலையில் இரவு நேரத்தில் ஏராளமான துரித உணவக கடைகள் அமைக்கப்படும்.

ஆபத்தான சாகசம்

இரவில் வேலைக்கு சென்று வரும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் இந்த கடைகளில் உணவருந்தி வருகின்றனர். குறிப்பாக வேலைக்கு சென்று வரும் இளம் பெண்கள் பலர் இந்த கடைகளுக்கு வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் இங்கு வரும் இளம் பெண்களை கவரும் வகையில் வாலிபர்கள் சிலர் தினமும் சாலையில் மோட்டார் சைக்கிளில் வீலிங் சாகசம் என்ற பெயரில் ஆபத்தான வகையில் இருசக்கர வாகனம் ஓட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விபத்து அபாயம்

நேற்று இரவும் வாலிபர் ஒருவர் சினிமா பாணியில் மோட்டார் சைக்கிளின் முன்புற சக்கரத்தை மேலே அந்தரத்தில் தூக்கி விட்டு பின்பக்க சக்கரத்தை மட்டும் தரையில் தொடும்படி ரேஸ் செய்து கொண்டே சென்றுள்ளார்.

இதனால் அந்த சாலையில் செல்பவர்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே போலீசார் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு சாகசம் செய்யும் வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நடவடிக்கை பாய்கிறது

இது குறித்து போக்கு வரத்து இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து கூறுகையில், சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளை கொண்டு அந்த வாலிபரின் மோட்டார் சைக்கிள் பதிவெண் அடையாளம் காணப்பட்டுள்ளது.

முதலில் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன் பின்னர் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

Similar News