உள்ளூர் செய்திகள்

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து கவர்னர் பேசியதை ஏற்க முடியாது- அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்

Published On 2023-06-06 14:09 IST   |   Update On 2023-06-06 15:12:00 IST
  • முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து கவர்னர் பேசியதை ஏற்க முடியாது.
  • முதல்வரின் ஜப்பான் பயணத்தின் மூலம் ரூ.3000 கோடிக்கு மேல் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளன.

சென்னை:

அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி முழு அரசியல்வாதியாக மாறி வருகிறார். துணைவேந்தர்கள் மாநாட்டில் அரசியல் பேசி உள்ளார். மாநாட்டை முழுக்க முழுக்க அரசியலுக்காக கவர்னர் பயன்படுத்தி உள்ளார்.

மத்திய அரசின் தரவரிசை பட்டியலில் 22 பல்கலைக்கழகங்கள் தமிழகத்தில் உள்ளது. சிறந்த கல்வி நிறுவனங்கள் தர வரிசை பட்டியலில் தமிழக பல்கலைக்கழங்கள் முன்னிலையில் உள்ளன.

தமிழ்நாட்டில் கல்வி சூழல் சரியில்லை, வேலைவாய்ப்பு உருவாக்கப்படவில்லை என பேசுவதா?. தமிழ்நாட்டின் கல்வி வரலாற்றை கவர்னர் அறிந்துகொள்ளாமல் பேசுகிறார்.

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கல்வி கட்டமைப்பில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளும் சிறந்து விளங்குகின்றன.

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து கவர்னர் பேசியதை ஏற்க முடியாது. குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது, சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு தொழில் முதலீட்டை ஈர்க்க பயணம் மேற்கொண்டுள்ளார்.

முதல்வரின் ஜப்பான் பயணத்தின் மூலம் ரூ.3000 கோடிக்கு மேல் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளன. தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழகம் திகழுகிறது.

உகந்த சூழல் காரணமாக தமிழகத்தை நோக்கி உலக முதலீட்டாளர்கள் படையெடுக்கிறார்கள். கல்வி, தொழில், வேலைவாய்ப்பில் உயர்ந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News