தமிழ்நாடு செய்திகள்

திருப்பரங்குன்றம் விவகாரம்: தனி நீதிபதியின் உத்தரவை நிறைவேற்றுவது அரசின் கடமை - ஐகோர்ட்டில் வாதம்

Published On 2025-12-17 14:01 IST   |   Update On 2025-12-17 14:01:00 IST
  • மாநில அரசு தனது கடமையை நிறைவேற்றுவதில் தவறி விட்டது.
  • மலை உச்சியில் விளக்கேற்றுவது இந்து மதத்தின் ஒரு முக்கிய சடங்காகும்.

மதுரை:

திருப்பரங்குன்றத்தில் உள்ள மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு மதுரை ஐகோர்ட்டின் டிவிசன் பெஞ்சில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு இன்று அதே நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது தனி நீதிபதியின் உத்தரவுக்கு ஆதரவாக தாக்கல் செய்த இடையீட்டு மனுதாரர்கள் சார்பில் தெலுங்கானாவின் முன்னாள் அரசு வக்கீல் எஸ். ஸ்ரீராம் ஆஜராகி வாதாடி வருகிறார். அதன் விவரம் வருமாறு:-

தனி நீதிபதியின் உத்தரவை நிறைவேற்றும்பட்சத்தில் பொது அமைதி பாதிக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் தரப்பில் தெரிவிக்கப்படுவது தனி நீதிபதி உத்தரவை அவமதிப்பதாகும். மேலும் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவு காரணமாக எந்த பொது அமைதியும் சீர்குலையவில்லை. அரசு கூறுவது ஏற்புடையதல்ல. மேலும் இந்த மேல்முறையீட்டு மனுவுக்கு உரிய ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை. தனி நீதிபதியின் உத்தரவை நிறைவேற்றுவது அரசின் கடமை.

எனவே இந்த உத்தரவை மனசாட்சியுடன் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தின் ஒரு அங்கமாக விளங்கும் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அரசு நிறைவேற்றவில்லை என்பதன் மூலம் அதிகாரிகள் தங்களின் அடிப்படை கடமையை மீறி உள்ளனர். மாநில அரசு தனது கடமையை நிறைவேற்றுவதில் தவறி விட்டது.

மனுதாரரால் பொது அமைதி குலைந்தது என்பது ஒரு சாக்குபோக்கு காரணம். நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றும் முன்னரே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த விவகாரத்தில் நீதிபதி தீர்ப்பை நிறைவேற்றக்கூடாது என்பதற்காக சம்பவத்தன்று திருப்பரங் குன்றம் பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் வாதாடினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பொது அமைதி கெடும் என்று அரசு தரப்பு கூறுவதும், அதற்கு மனுதாரர் தரப்பு எதிர்ப்பு தெரிவிப்பதும் மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என்று கருத்து தெரிவித்தனர். அதன் பின்பு மூத்த வக்கீல் ஸ்ரீராம் தனது வாதத்தை தொடர்ந்து கூறியதாவது:-

மலை உச்சியில் விளக்கேற்றுவது இந்து மதத்தின் ஒரு முக்கிய சடங்காகும். குறிப்பிட்ட இடத்தில்தான் வழிபடும் இந்த உரிமை, அரசியலமைப்புச் சட்டத்தின் 25-வது பிரிவின் கீழ் ஒரு உரிமை அல்ல என்று மாநில அரசு வாதிடுகிறது. ஒருபுறம் இதைச் சொல்லிக்கொண்டே, மறுபுறம் இந்த உத்தரவு பொது ஒழுங்கிற்கு எதிரானது என்றும் வாதிட்டு வருகின்றனர். இது ஏற்கத்தக்கது அல்ல.

1996-ம் ஆண்டு நீதிபதி கனகராஜ் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தான் தர்காவின் அருகில் 15 மீட்டர் தூரத்தில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.

ஆனால் இந்த விவகாரத்தை இரு மதத்திற்கு இடையே ஏற்படும் பிரச்சனை என்பது போல் திசை திருப்பி விட்டுள்ளனர். தனி நீதிபதி தனது கருத்தை தீர்ப்பில் திணித்து உள்ளார் என எதிர்த்தரப்பினர் வாதாடுவது ஏற்புடையதல்ல.

எனவே கோவில் நிர்வாகத்தின் உரிமையை நிலைநாட்டுவதற்காகவே மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்து உள்ளார் என்றார்

அதற்கு நீதிபதிகள், தீப தூணில் தான் தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவு உள்ளதா? என கேட்டனர். அதற்கு வக்கீல் ஸ்ரீராம் கூறுகையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டியது கோவில் நிர்வாகம், மதுரை மாவட்ட கலெக்டரின் கடமை.

இவ்வாறு மனுதாரர் தரப்பில் வாதாடப்பட்டது தொடர்ந்து விசாரணை நடந்தது.

Tags:    

Similar News