உள்ளூர் செய்திகள்

மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது

Published On 2023-07-19 14:31 IST   |   Update On 2023-07-19 14:31:00 IST
  • காலை 8 மணி முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டன.
  • விழாவின் முக்கிய நிகழ்வான அம்மன் அழைப்பு, திருகுண்டம் இறங்குதல் நிகழ்ச்சி வருகிற 25-ந்தேதி நடைபெற உள்ளது

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது.

இங்கு ஆண்டுதோறும் ஆடிக்குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். அந்த வகையில் வனபத்திரகாளி அம்மன் கோவிலின் 30-வது ஆண்டு ஆடிக்குண்டம் திருவிழா நேற்று பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. காலை 8 மணி முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டன.

அதன்பிறகு பவானி ஆற்றங்கரை விநாயகர் கோவிலில் இருந்து அம்மன் அலங்கார அணிக்கூடை, அம்மன் விருத்தம் அழைப்பு நடந்தது. அப்போது பம்பை, உடுக்கை, நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட மங்கள இசை முழங்க, தலைமை பூசாரி ரகுபதி அணிக்கூடையை தலையில் சுமந்து எடுத்து வந்தார். அதன்பிறகு கோவிலில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

இதில் முதலாவதாக தலைமை பூசாரி ரகுபதிக்கு காப்பு கட்டப்பட்டது. பின்னர் அம்மன், சிம்ம வாகனம், உற்சவமூர்த்தி, அம்மன் திரிசூலம் உள்ளிட்ட அம்சங்களுக்கு காப்பு கட்டினர். இதனை தொடர்ந்து கோவில் அறங்காவலர் வசந்தா, சம்பத், நாகேந்திரன் ஆகியோருக்கு காப்புகள் கட்டப்பட்டன.இதனைத் தொடர்ந்து நெல்லித்துறை கிராம மக்கள் முன்னிலை யில் அம்மனுக்கு விசேஷ அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. அதன்பிறகு அம்மனிடம் வைத்து எடுக்கப்பட்ட பூ மற்றும் பொரி ஆகியவற்றை அம்மனுக்கு சாத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆடிக்குண்டம் திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. வருகிற 21-ந்தேதி லட்சார்ச்சனை, 22-ந்தேதி கிராமசாந்தி, 23-ந்தேதி காலை 10 மணியளவில் கொடியேற்றம் நடைபெற உள்ளன.

விழாவின் முக்கிய நிகழ்வான அம்மன் அழைப்பு, திருகுண்டம் இறங்குதல் நிகழ்ச்சி வருகிற 25-ந்தேதி நடைபெற உள்ளது.ஆடிகுண்டம் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கான பல்வேறு வசதிகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத், திருக்கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி ஆகியோர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News