கவர்னர் ரவியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்-அ.தி.ம.மு.க. கோரிக்கை
- கவர்னர் ரவியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என அ.தி.ம.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.
- மொழி வாரியான, இனவாரியான பாகுபாட்டை திணிக்கும் வகையில் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.
மதுரை
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர்-வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு என்று சொல்ல வாய்மறுக்கும் மத்திய அரசால் தமிழ்நாட்டின் கவர்னராக இங்கு பதவி வகிக்கும் ஆளுநர் ரவி தமிழ்நாட்டில் 50 ஆண்டுகால திராவிட ஆட்சி தவறான வழிகாட்டியாக இருந்து வருவதாக பேசியது என்பது அரசாங்க ஊழியர் என்பதை மறந்த செயலாகும்.
ஜனநாயக நாட்டில் மத்திய அரசு பதவியில் இருப்பவர் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி செயல்படலாமே தவிர தனிப்பட்ட அரசியல் வாதியாக மாறி மொழி வாரியான, இனவாரியான பாகுபாட்டை திணிக்கும் வகையில் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டின் திராவிட பாரம்பரியம் தெரியாமல் பேசி வரும் கவர்னர் ரவி முன்னாள், இந்நாள் வரையிலான தமிழ்நாட்டின் ஆளுமை சக்திகளாக இயங்கி வரும் திராவிட இயக்க ஆளுமைகளை குறிப்பாக அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, திராவிட மாடலாய் வழி தொடரும் நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட அனைவரையும் இழிவு படுத்தும் வகையில் செயல்படுவதை திராவிட கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்.
இந்திய வரலாற்றில் ஆளுமையின் பெரும்பங்கு தமிழ்நாட்டுக்கு உண்டு என்ற பெருமையை பொறுக்க முடியாமல் அதனை சீர்குலைக்கும் எண்ணத்தில் கவர்னர் ரவி தொடர்ந்து பேசி வருவதும், செயல்பட்டு வருவதும் தமிழ்நாட்டு மக்களை கொந்தளிப்புக்கு உள்ளாக்கி வருகிறது.
மத்திய அரசு கவர்னர் ரவியை தமிழ்நாட்டில் இருந்து திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட அணி திரள்வோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.