தமிழ்நாடு செய்திகள்

மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து-நடராசன் சிலைகளை திறந்து வைத்தார் முதலமைச்சர்

Published On 2026-01-25 10:05 IST   |   Update On 2026-01-25 10:05:00 IST
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்திற்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
  • மொழிப்போரில் உயிர்நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கம், வீர வணக்கம் என்று முழக்கமிட்டனர்.

சென்னை:

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மூலகொத்தளத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்திற்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

மூலக்கொத்தளத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவிடம் நோக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணியும் நடந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் பேரணியில் நடந்து சென்று நினைவிடங்களில் வைக்கப்பட்டிருந்த தாளமுத்து, நடராசன், டாக்டர் தருமாள்பாள் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

அவருடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மு.பெ.சாமிநாதன், மாவட்ட செயலாளர்கள் ஆர்.டி.சேகர், மாதவரம் சுதர்சனம், கலாநிதி எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, ஐட்ரீம் மூர்த்தி, எபிநேசர், மேயர் பிரியா, முன்னாள் எம்.எல்.ஏ. க.ரங்கநாதன், புழல் நாராயணன், மாணவர் அணி நிர்வாகிகள் திரளாக சென்று மரியாதை செலுத்தினார்கள்.

மொழிப்போரில் உயிர்நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கம், வீர வணக்கம் என்று முழக்கமிட்டனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கறுப்பு பேண்ட், சட்டை அணிந்து அமைதி ஊர்வலத்தில் பங்கேற்றிருந்தனர்.

இதைத் தொடர்ந்து எழும்பூரில் உள்ள சி.எம்.டி.ஏ. அலுவலகத்தில் (தாளமுத்து, நடராசன் மாளிகை வளாகம்) மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து-நடராசன் சிலைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். மலர் தூவியும் வணங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News