மதுபான பார் உரிமையாளர் உள்பட 3 பேர் கைது
- மதுபான பார் உரிமையாளர் உள்பட 3 பேர் கைது செய்தனர்.
- தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை மீனாம்பாள்புரம் புலித்தேவன் தெருவை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் பிரவீன்குமார்(வயது21). இவர் சென்னையில் செயல்படும் ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்தநிலையில் பிரவீன்குமார் சமீபத்தில் மதுரைக்கு வந்தார். அப்போது அவர் சக நண்பர்களுடன் பி.பி.குளத்தில் உள்ள ஒரு மதுபான பாருக்கு சென்றுள்ளார். அங்கிருந்த ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்து அவர் குடித்துள்ளார். இதற்கு பார் உரிமையாளர் பிரேம்குமார் எதிர்ப்பு தெரி வித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து பிரவீன்குமார் மற்றும் அவரது நண்பர்கள் பார் உரிமையாளரிடம் தட்டிக் கேட்டனர். அப்போது அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பார் உரிமையாளர் தரப்பினர் பிரவீன்குமாரை தாக்கினர்.
இந்த சம்பவத்தில் பிரவீன்குமாரின் பற்கள் விழுந்து ரத்தகாயம் ஏற் பட்டது. அவரை நண்பர்கள் மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பிரவீன் குமார், தல்லாகுளம் போலீ சில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் மதுபான உரிமையாளர் பிரேம்குமார், ஊழியர்கள் சேகர், சோனைமுத்து ஆகியோர் பிரவீன்குமாரை தாக்கியது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து எஸ்.ஆலங்குளம் தேவேந்திரன் நகரை சேர்ந்த பார் உரிமையாளர் பிரேம்குமார்(29), திருப்புவனம் போலீஸ் லைன் தெருவை சேர்ந்த சேகர்(55), அண்ணாநகர் சோனைமுத்து(வயது 49) ஆகிய 3 பேரை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர்.