உள்ளூர் செய்திகள்

வாலிபரிடம் கத்தி முனையில் செல்போன்-பணம் பறித்த 2 பேர் கைது

Published On 2023-02-27 13:29 IST   |   Update On 2023-02-27 13:30:00 IST
  • மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் வாலிபரிடம் கத்தி முனையில் செல்போன்-பணம் பறித்து தப்பினர்.
  • இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

மதுரை

மதுரை உலகநாதபுரம், கள்ளழகர் நகரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஆதித்யன் (வயது 22). இவர் சர்வேயர் காலனி 120 அடி ரோட்டில் உள்ள மோட்டார் சைக்கிள் நிறுவனத்தில் ஊழியராக உள்ளர்.

நேற்று காலை இவர் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். அவரை மற்றொரு மோட்டார் சைக்கிள் பின் தொடர்ந்தது. அதில் 2 பேர் இருந்தனர். மேலூர் பைபாஸ் ரோட்டில் ஆதித்யன் சென்றபோது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் ஆதித்யன் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

அவரை மோட்டார் சைக்கிளில் வந்த 2 ேபரும் சுற்றி வளைத்து கத்தி முனையில் செல்போன், ரூ.2 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பினர். பட்டப் பகலில் நடந்த இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர வடக்கு துணை கமிஷனர் அரவிந்த் உத்தரவிட்டார்.

அண்ணாநகர் உதவி கமிஷனர் சூரக்குமார் ஆலோசனையின்பேரில், மாட்டுத்தாவணி இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

இதில் குற்றவாளிகள் தப்பிய மோட்டார் சைக்கிளின் பதிவெண் விவரம் தெரியவந்தது. மதுரை மாநகரில் குற்றங்களை தடுக்கும் வகையில் கூடுதலாக தற்காலிக சோதனை சாவடிகளை அமைக்க வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டிருந்தார்.

மாட்டுத்தாவணியில் ஏற்கனவே 2 நிரந்தர சோதனை சாவடிகள் உள்ளன. இந்த நிலையில் போலீசார் பூ மார்க்கெட், மேலூர் மெயின் ரோடு உள்பட 3 பகுதிகளில் தற்காலிக சோதனை சாவடிகளை அமைத்து வாகன ஓட்டிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் நேற்று இரவு வாகன சோதனை நடத்தினார். அங்கு ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அதில் 2 பேர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். இதில் அவர்கள் ஆதித்தியனிடம் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, முத்தனேந்தல் பல்லு பாலா என்ற பாலமுருகன் (31), நாகமங்கலம், ரூத் நகர், அப்பாஸ் மந்திரி மகன் தமிம்அன்சாரி (23) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News