உள்ளூர் செய்திகள்

சட்ட மாணவர்கள் நேரத்தை வீணாக்காமல் நல்ல புத்தகங்களை படிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பேச்சு

Published On 2023-07-15 09:23 GMT   |   Update On 2023-07-15 09:23 GMT
  • கோவை சட்டகல்லூரிக்கு வரவில்லை என்றால் என்னுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியவில்லை.
  • இன்று நடந்த விழாவில் 1,034 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.

வடவள்ளி,

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் மற்றும் கோவை அரசு சட்ட கல்லூரி சார்பில் கோவை சட்டக்கல்லூரியில், 2-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது.

விழாவில் சிறப்பு விருந்தினராக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, முதன்மை விருந்தினராக கோவை அரசு சட்ட கல்லூரி முன்னாள் மாணவரும், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கே.வி.விஸ்வநாதன் கலந்து கொண்டனர்.

விழாவுக்கு தழிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் துணை வேந்தர் என்.எஸ்.சந்தோஷ்குமார், தமிழ்நாடு சட்ட கல்வி இயக்குனர் விஜயலட்சுமி ஆகியோர் தலைமை தாங்கினார். கோவை அரசு சட்ட கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார்.

இன்று நடந்த விழாவில் 1,034 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. 700 பேர் நேரில் வந்து பெற்று கொண்டனர்.

விழாவில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கே.எஸ்.விஸ்வநாதன் பேசியதாவது:-

கோவை சட்டகல்லூரிக்கு வரவில்லை என்றால் என்னுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியவில்லை. நான் இந்த நிலைமைக்கு வந்ததற்கு இந்த கல்லூரி தான் காரணம்.

சட்ட பட்டம் வந்து விட்டது. அவ்வளவு தான் என்று எண்ண விட வேண்டாம். இப்போது தான் உங்களுக்கு வாழ்க்கையே ஆரம்பமாகிறது. வாழ்கையை எப்படி வாழ வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். நான் உங்கள் முன் நீதிபதியாக இல்லாமல் நண்பராக இருந்து சொல்கிறேன்.

நேரத்தை எப்படி பயன்படுத்துவது என்பது நம் கையில் தான் உள்ளது. நேரத்தை வீணாக்காதீர்கள். நேரம் கிடைக்கும் போது எல்லாம் நல்ல புத்தகங்களை எடுத்து படியுங்கள். அது எப்போதாவது பயன்படும்.

வக்கீல் தொழில் என்பது மிக கடினமான தொழில். அதில் ஊறிவிட்டால் நமக்கு அது ஒரு அமிர்தம் போன்றதாக காணப்படும். நீதிபதியிடம் உங்கள் தரப்பு வாதங்களை பனிவுடன் எடுத்து வையுங்கள். இளைய வக்கீல்களாகிய நீங்கள் வரும் காலங்களில் உங்களுக்கு என்று சில திட்டங்களை வகுத்துக் கொள்ளுங்கள்.

நான் அரசு பஸ்சில் தான் நீதி மன்றத்திற்கு சென்றேன். உங்கள் மனதில் சரி என்று பட்டதை மறைத்து கொள்ளாமல் தைரியமாக வெளியில் பேசுங்கள். பொய் வழக்கு என்று தெரிந்தால் அதனை எடுத்து வாதிட வேண்டாம். வக்கீல் தொழிலில் வானம் கூட எல்லையாகாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேசும் போது, சட்டம், அரசு, நீதித்துறை என நாட்டின் 3 துறைகளோடு, 4-ம் துறையான பத்திரிகையும் சேர்ந்து செயல்பட்டால் நாடு சிறப்பாக செயல்படும். அதிக மதிப்பெண் பெற்ற மாணவருக்கு மிக எளிதாக கிடைக்ககூடிய படிப்பு சட்ட படிப்பு.

கோவை கல்லூரியில் யானை பிரச்சனை இருப்பதாக கூறிய நிலையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில், சட்டபடிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு 95-க்கு கீழ் கட்டாப் மதிப்பெண் வைக்க கோரிக்கை வைத்து உள்ளோம் என்றார்.

Tags:    

Similar News