உள்ளூர் செய்திகள்

அமைப்புசாரா தொழிலாளர்கள் உறுப்பினராக பதிவு செய்யலாம்- தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்

Published On 2022-08-04 09:44 GMT   |   Update On 2022-08-04 09:44 GMT
  • 17 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்கள் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டது.
  • அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் உறுப்பினர் சேர்க்கை கடநத ஜூன் மாதம் 19-ந்தேதி முதல் இணையதளம் வாயிலாக நடைபெற்று வருகிறது.

நெல்லை:

தமிழ்நாட்டில் அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலனை பேணி காக்கும் பொருட்டு தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் மற்றும் இதர 17 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்கள் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டது.

மேற்படி நலவாரியங்களில் பதிவுபெற்ற தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி, இயற்கை மரணம், விபத்து மரணம், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் பணியிடத்து விபத்து மரணம் போன்றவற்றுக்காக நிவாரண உதவி, நலத்திட்ட உதவி வழங்கப்படுகிறது. மேலும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவுபெற்ற தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேற்படி அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் உறுப்பினர் சேர்க்கை கடநத 19-6-2020 முதல் இணையதளம் வாயிலாக நடைபெற்று வருகிறது. மேலும் நலவாரியங்கள் மூலம் வழங்கப்படும் பதிவு, புதுப்பித்தல் மற்றும் கேட்பு மனுக்கள் பெறுதல் போன்ற அனைத்து சேவைகளும் இணையதளம் வழியாக வழங்கப்பட்டு வருகிறது.

நலவாரியங்களில் உறுப்பினராக சேர்வதற்கு பணிச்சான்று, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம், வயதுக்கான சான்று, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் போன்ற ஆவணங்களுடன் http://www.tnuwwb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு கோரி விண்ணப்பித்து கொள்ளலாம்.

ஏற்கனவே கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டவர்கள் தங்களது பதிவினை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இணையதளம் வழியாக புதுப்பித்து கொள்ள வேண்டும்.

எனவே நெல்லை மாவட்டத்தில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள 18 முதல் 59 வயதுக்கு உட்பட்ட தொழிலாளர்கள் மேற்கண்டவாறு நலவாரியங்களில் உறுப்பினராக பதிவு செய்து வாரியங்கள் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடையலாம்.

இந்த தகவலை நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம், கூடுதல் பொறுப்பு) குலசேகரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News