உள்ளூர் செய்திகள்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

Published On 2022-10-05 19:02 GMT   |   Update On 2022-10-05 19:02 GMT
  • குலசை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நள்ளிரவில் விமர்சையாக நடந்தது.
  • பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபட்டனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் பல லட்சக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுகின்றனர்.

கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் காப்பு கட்டி, நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து ஊர் ஊராகச் சென்று காணிக்கை வசூலித்தனர்.

பெரும்பாலான பக்தர்கள் காளி, சிவன், பார்வதி, ராமர், லட்சுமணன், அனுமார், பிரம்மன், விஷ்ணு, கிருஷ்ணர் போன்ற சுவாமி வேடங்களையும், அரசன், அரசி, போலீஸ்காரர், குறவன், குறத்தி, கரடி, அரக்கன் போன்ற பல்வேறு வேடங்களையும் அணிந்து இருந்தனர். இதனால் தென் மாவட்டங்களில் காணும் இடமெல்லாம் வேடம் அணிந்த பக்தர்களாகவே காட்சி அளிப்பதால் தசரா திருவிழா களைகட்டியது.

விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். தினமும் காலை முதல் இரவு வரையிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், மாலையில் சமய சொற்பொழிவு, பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

இந்நிலையில், பத்தாம் நாளான இன்று (புதன்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு குலசை தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் விமர்சையாக நடைபெற்றது.

நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பாக எழுந்தருளி மகிஷா சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவிலுக்கு பக்தர்கள் மற்றும் தசரா குழுவினர் எளிதில் வந்து செல்லும் வகையில் தனிப்பாதைகள் அமைக்கப்பட்டன. விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்தனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

2 ஆண்டுகளுக்கு பின் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News