உள்ளூர் செய்திகள்

காரைக்குடியில் நள்ளிரவில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து 40 பவுன் நகைகள் கொள்ளை

Published On 2025-09-08 12:09 IST   |   Update On 2025-09-08 12:09:00 IST
  • வீட்டின் முன்பக்க கதவுகள் உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்தது.
  • வேணி காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தந்தை பெரியார் நகர் ஒன்பதாவது வீதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் வேணி (வயது 41). இவருடன் அவரது வயதான தாயாரும் தங்கியுள்ளார். இந்தநிலையில் இவர் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு மதுரை சென்றிருந்தார். அங்கு உறவினர்கள் சார்பில் பாண்டி கோவிலில் நடை பெற்ற கிடாவெட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு நேற்று நள்ளிரவில் வீடு திரும்பினார்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவுகள் உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வேணி, அச்சத்துடன் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டின் அறைகளில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. மேலும் தனி அறையில் வைக்கப்பட்டிருந்த பீரோவை உடைத்து 40 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து வேணி காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் கொள்ளை நடந்த வீட்டிற்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து சோதனை செய்தனர். அருகில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

பூட்டியிருந்த வீட்டில் வீட்டின் கதவை உடைத்து 40 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News