உள்ளூர் செய்திகள்

குழித்துறை-களியக்காவிளை சாலையில் கனிம வள லாரிகளை நிறுத்துவதால் போக்குவரத்து நெருக்கடி

Published On 2023-05-09 06:47 GMT   |   Update On 2023-05-09 06:47 GMT
  • விபத்து அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
  • பணியாளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமலும் அவதி

கன்னயாகுமரி :

குமரி மாவட்டத்தில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான லாரிகள், அதிக பாரத்துடன் கனிம வளங்களை கேரளாவிற்கு கடத்தி செல்வது தொடர் கதையாக நடந்து வருகிறது.

கனிம வள லாரிகளை குழித்துறை முதல் களியக்காவிளை வரை ஒன்றன் பின் ஒன்றாக சாலையோரங்களில் நிறுத்துவதால் பிற வாகனங்கள் செல்ல முடியாமல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. மேலும் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இந்த லாரிகள் இரவு, பகலாக சாலையில் செல்வதால் காலை நேரத்தில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமலும் பணியாளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

களியக்காவிளை போலீசார் அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். ஆனால் சில டிரைவர்கள், போலீசாரை பார்த்தவுடன் கனிம வள லாரிகளை சாலையின் ஓரங்களில் நிறுத்தி விட்டு தப்பியோடி விடுகின்றனர். போலீசார் லாரியின் பக்கம் வந்து பார்க்கும் போது யாரும் இல்லாததால் அதனை பறிமுதல் செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

வாகனத்தின் அருகிலோ அல்லது தொலைவிலோ போலீசார் நின்றால் அந்த பக்கமே டிரைவர்கள் வருவதில்லை. போலீசார் அந்த இடத்தை விட்டு சென்று விட்டால் மறு கணமே லாரியை எடுத்து செல்கின்றனர். இந்த சம்பவம் தொடர் கதையாக நடந்து வருகிறது. ஆகவே போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு சாலையோரங்களில் நிறுத்தி செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News