50 ஆயிரம் இஸ்லாமிய குடும்பங்கள் பயன்பெறும் வகையில் கோவை புல்லுக்காட்டில் பொது இஸ்லாமிய அடக்கஸ்தலம் அமைக்க முடிவு
- மாநகராட்சி கூட்டத்தில் 63 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- மண் சாலைகளை தார் சாலைகளாக மாற்றுவதற்காக ரூ.13.75 கோடி மதிப்பீட்டில் பணிகளை மேற்கொள்ளவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
கோவை, ஜூலை.31-
கோவை மாநகராட்சி விக்டோரியா அரங்கில் இன்று மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். துணை மேயர் வெற்றிசெல்வன், மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநகராட்சி கூட்டத்தில் 63 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கோவை மாநகராட்சியில் 100 வார்டு பகுதியில் உள்ள அறிவிக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்படாத குடிசை பகுதிகள் தவிர்த்து, சில பகுதிகளில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு தற்போது பொது குழாய்கள் மற்றும் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.
இந்த பகுதிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் வருவாய் அல்லாத குடிநீராக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மாநகராட்சிக்கு வருமான இழப்பு ஏற்படுகிறது. ஆகையால் பொது குழாய்கள் மற்றும் லாரி மூலம் வழங்கப்படும் குடிநீரை பெருமளவு குறைக்க இப்பகுதிகளில் வசித்து வரும் குடியிருப்புதாரர்கள் வீடுகளுக்கு இணைப்புகள் வழங்கினால் இதனால் பெறப்படும் குடிநீர் கட்டணத் தொகை மூலம் மாநகராட்சிக்கு வருவாய் அதிகரிக்கும்.
எனவே கோவை மாநகராட்சியின் விரிவாக்கத்திற்கு முன்பிருந்த பகுதியில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத குடிசைப்பகுதிகளில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர புரணமைப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளுக்கு வீட்டு குடிநீர் இணைப்புகளுக்கான வைப்பு தொகை விலக்கு அளிக்கப்பட்டு, குறைந்தபட்ச சேவை கட்டணமாக ரூ.250 மட்டும் செலுத்தினால் வீட்டுக்கு குடிநீர் இணைப்பு வழங்கலாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதே போல் மாநகராட்சியின் 5 மண்டலங்களுக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணியை ரூ.4.84 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மண் சாலைகளை தார் சாலைகளாக மாற்றுவதற்காக ரூ.13.75 கோடி மதிப்பீட்டில் பணிகளை மேற்கொள்ளவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதே போல் பல்வேறு சாலை பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் 86-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் 50 ஆயிரத்து க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அங்கு மரணம் அடையக்கூடிய இஸ்லாமி யர்களை அடக்கம் செய்வத ற்கென்று ஒரு பொதுவான இஸ்லாமிய அடக்கஸ்தலம் இதுவரையிலும் இல்லை.
இப்பகுதியில் மரணிப்பவர்களை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள பொது அடக்க ஸ்தலத்தில் அடக்கம் செய்து வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு 86-வது வார்டுக்கு உட்பட்ட புல்லுக்காடு பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான காலியிடங்களில் இஸ்லாமியர்களுக்கு பொது அடக்கஸ்தலம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது.
கோவை மாநகரில் நாள்தோறும் உருவாகும் குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தும் பணியில் தொய்வு ஏற்படுவதாலும், பொதுமக்கள் மற்றும் பொது சுகாதார நலன் கருதி திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பணிகளை செயல்படுத்த நகராட்சி நிர்வாக இயக்குனர் கடிதத்தில் குறிப்பிடபட்டது போல் உத்தரவுகள் இப்பணிக்காக மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி கடந்த கூட்டத்தில் ஒத்திவைக்கப்பட்ட இந்த தீர்மானத்திற்கு மேயர் அவர்களால் முன் அனுமதி பெறப்பட்டு பணி உத்தரவு வழங்க ப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு ரூ.170 கோடி தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்ப ட்டது.இதுபோன்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன.
கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் பேசுகையில், மாநகராட்சி பள்ளிகளில் கண்டிப்பாக தினமும் காலை மற்றும் மதியம் என 2 முறை குடிநீர் விநியோகம் செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது உள்ள பொது குழாய்கள் அகற்றப்படாது. தெரு விளக்குகள் பராமரிப்பில் அதிகம் கவனம் செலுத்தப்படும்," என்றார்.