ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் இன்ஸ்பெக்டர் கைது
- லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வகுமார் தென்காசி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
- லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதாவை கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்தவர் செல்வகுமார். விவசாயி. இவர் மீது தென்காசி மாவட்டம் கடையம் போலீஸ் நிலையத்தில் ஆட்கடத்தல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக செல்வகுமார் கடையம் போலீஸ் நிலையத்தில் தினமும் நிபந்தனை ஜாமீன் கையெழுத்திட்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதா போலீஸ்நிலையத்தில் வைத்து செல்வகுமாரிடம் வழக்கு தொடர்பாக பேசியுள்ளார். அப்போது வழக்கை சீக்கிரம் முடித்து கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை வெளியே எடுப்பதற்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறிய அவர் அதற்காக ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வகுமார் தென்காசி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதாவை கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி ரசாயனம் தடவப்பட்ட ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள நோட்டுகளை செல்வகுமாரிடம் கொடுத்து அனுப்பினர். அவர் அந்த நோட்டுகளை இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதாவிடம் கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்ஸ்பெக்டரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.