உள்ளூர் செய்திகள்

கோவையில் 1,265 தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு

Published On 2022-06-18 08:54 GMT   |   Update On 2022-06-18 08:54 GMT
  • கோவை மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடந்தது.
  • பள்ளி வாகனங்களை இயக்கும் டிரைவர்களுக்கு பாதுகாப்பாக வாகனங்களை எவ்வாறு இயக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கோவை:

பள்ளி, கல்வி நிலையங்கள் ஆண்டு விடுமுறை காலம் முடிந்து 2022-2023-ம்கல்விஆண்டு தொடங்கி உள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு 2012ன் படி, கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும்.

அதன்படி கோவை மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடந்தது. இதில் மாவட்டத்தில் உள்ள 230 பள்ளிகளைச் சேர்ந்த 1,265 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வை மாவட்ட கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்தார். அப்போது, பள்ளி வாகனங்களை இயக்கும் டிரைவர்களுக்கு பாதுகாப்பாக வாகனங்களை எவ்வாறு இயக்க வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் ஆய்வுக்காக வந்திருந்த வாகன டிரைவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளி வாகனங்களில் அவசரகால வழியுள்ளதா? முதலுதவி பெட்டி உள்ளதா? தீயணைப்பான் 2 உள்ளதா? கண்காணிப்பு காமிராவில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளதா? வேக கட்டுப்பாட்டு கருவி உள்ளதா? வாகனங்களில் மாணவர்கள் ஏறுவதற்கு வசதியாக தரையிலிருந்து 30 சென்டி மீட்டர் உயரத்தில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாநகர போக்குவரத்து துணை கமிஷனர் மதிவாணன், மாவட்ட போக்குவரத்து இணை ஆணையர் செந்தில்நாதன், உதவி கமிஷனர் சரவணன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சத்தியகுமார் ,சிவகுருநாதன் பாலமுருகன் மற்றும் போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News