உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல்லில் தொடர் மழை: கொடைக்கானலில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

Published On 2024-12-01 09:47 IST   |   Update On 2024-12-01 09:47:00 IST
  • பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
  • மண், பாறைகளும் சாலையில் சரிந்துள்ளது.

கொடைக்கானல்:

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பெஞ்சல் புயல் காரணமாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை, புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காணரமாக திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கி வாகன ஓட்டிகள் பாதிப்படைந்து வருகின்றனர்.

சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு செல்ல பழனி, வத்தலக்குண்டுவில் இருந்து மலைச்சாலை உள்ளது. தேனி மாவட்டத்தில் இருந்து பெரியகுளம், அடுக்கம் வழியாக கொடைக்கானலுக்கு செல்லும் பாதையை சீரமைத்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுற்றுலா வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மலைச்சாலையில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட்டதால் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இலகுரக வாகனங்கள், பைக்குகள் செல்ல அனுமதிக்கப்பட்டது.

தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக அடுக்கம் சாலையில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும் மண், பாறைகளும் சாலையில் சரிந்துள்ளது.

இதனை ஜே.சி.பி. எந்திரம் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர். தற்காலிக சீரமைப்பிற்கு பின்னர் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.

இருப்பினும் தடுப்பு சுவர்களை பலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

திண்டுக்கல் 2, காமாட்சிபுரம் 3.8, நிலக்கோ ட்டை 2.2, வேடசந்தூர் தாலுகா அலுவலகம் 2.2, புகையிலை ஆராய்ச்சி மையம் 2.2, பழனி 3, ரோஸ்கார்டன் 2.5, பிரையண்ட் பூங்கா 1.5 என மாவட்டம் முழுவதும் 19.40 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News