உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

Published On 2022-12-01 15:01 IST   |   Update On 2022-12-01 15:01:00 IST
  • ரத்தப்போக்கால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியும் கடந்த, 2019 ஜனவரி மாதம் 16- ந் தேதி இறந்தார்.
  • குற்றம் சாட்டப்பட்ட தமிழரசனுக்கு போக்சோ சட்டத்தின் கீழ், 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், மாணவியை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக, 20 ஆண்டு சிறை, 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.

கிருஷ்ணகிரி,

கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் கூலிதொழிலாளிக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த புங்கனை கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 35). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர், கடந்த, 2018-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.

இந்த நிலையில் கல்லூரி மாணவிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. அவரை பெற்றோர்

மருத்துவமனையில் சேர்த்து பரிசோதித்த போது அவர், 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. இது குறித்து மாணவியிடம் பெற்றோர் கேட்ட போது அதற்கு தமிழரசன் காரணம் என தெரிவித்தார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் தமிழரசனிடம் கேட்டபோது, மாணவியின் கர்ப்பத்திற்கு தான் காரணம் இல்லை எனக்கூறி தகராறு செய்தார்.

இந்த நிலையில் மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கல்லூரி மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்து இறந்தது. மேலும் ரத்தப்போக்கால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியும் கடந்த, 2019 ஜனவரி மாதம் 16&ந் தேதி இறந்தார். மகளை கர்ப்பமாக்கி, ஏமாற்றியதாக கல்லூரி மாணவியின் பெற்றோர் கல்லாவி போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் தமிழரசனை போலீசார் கைது செய்தனர்.

மரபணு பரிசோதனையில் இறந்த குழந்தை தமிழரசன் மூலம் பிறந்தது உறுதியானது.

இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுதா நேற்று தீர்ப்பு கூறினார். அதன்படி குற்றம் சாட்டப்பட்ட தமிழரசனுக்கு போக்சோ சட்டத்தின் கீழ், 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், மாணவியை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக, 20 ஆண்டு சிறை, 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். மேலும் தண்டனைகளை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் உமாதேவி மங்களமேரி ஆஜராகி வாதாடினார்.

Tags:    

Similar News