சட்டசபையில் வினாக்கள்-விடைகள் நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில்
- மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சட்டசபை அலுவல்கள் தள்ளி வைக்கப்பட்டன.
- வினாக்கள்-விடைகள் நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
சென்னை:
தமிழ்நாடு சட்டசபை நேற்று காலை 9.30 மணிக்கு கூடியது. மறைந்த எம்.எல்.ஏ. மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு நேற்று சட்டசபையில் இரங்கல் குறிப்புகளையும், இரங்கல் தீர்மானங்களையும் சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சா.பன்னீர்செல்வம், எல்.கணேசன் ஆகியோருக்கு இரங்கல் குறிப்பை சபாநாயகர் வாசித்தார். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அனைத்து உறுப்பினர்களும் சில நொடிகள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
அதைத் தொடர்ந்து, முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவரும், பிரபல தொழிலதிபருமான அருணாசலம் வெள்ளையன், பிரபல கவிஞர் ஈரோடு தமிழன்பன் என்ற செகதீசன், சினிமா தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன், முதுபெரும் அரசியல் தலைவரும், மக்களவை முன்னாள் தலைவருமான சிவராஜ் பாட்டீல், சேந்தமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ. (தி.மு.க.) பொன்னுசாமி ஆகியோரின் மறைவுக்கு சபாநாயகர் அப்பாவு இரங்கல் தீர்மானத்தை வாசித்தார்.
இதையடுத்து எம்.எல்.ஏ.க்கள் அனைவரும், சில நொடிகள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சட்டசபை அலுவல்கள் தள்ளி வைக்கப்பட்டன. நேற்று 8 நிமிடங்கள் மட்டுமே சட்டசபை அலுவல்கள் நடந்தன.
இந்நிலையில் சட்டசபை கூட்டத்தொடரின் 3-வது நாள் அமர்வு இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. வினாக்கள்-விடைகள் நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.