தமிழ்நாடு செய்திகள்

நாளை மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பொதுக்கூட்டம்: இ.பி.எஸ்-கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு

Published On 2026-01-22 11:21 IST   |   Update On 2026-01-22 11:21:00 IST
  • பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பிரதமரை வரவேற்கிறார்கள்.
  • பிரதமர் வருகையையொட்டி மதுராந்தகம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

சென்னை:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு தீவிரமாகி உள்ள பா.ஜ.க. கூட்டணி பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் தேர்தல் பிரசாரத்தையும் இப்போதே முடுக்கி விட்டுள்ளது.

இதன்படி பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பிரமாண்ட பொதுக் கூட்டத்துக்கு நாளை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சென்னையை அடுத்துள்ள மதுராந்தகத்தில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள பகுதியில் பிரதமரின் கூட்டத்திற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பிரதமர் பங்கேற்கும் கூட்டத்துக்காக 15 ஆயிரம் போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

பிரதமரின் வருகையையொட்டி நேற்று காலையில் இருந்தே டெல்லியில் இருந்து சென்னை வந்துள்ள மத்திய பாதுகாப்பு படை போலீசார் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை தங்களது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். பொதுக் கூட்டம் நடைபெறும் இடத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நாளை காலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி அங்கிருந்து மதியம் 1.15 மணிக்கு தனி விமானத்தில் சென்னைக்கு வருகிறார்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து மதியம் 2.15 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு மதுராந்தகத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை சென்றடைகிறார். அங்கு பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பிரதமரை வரவேற்கிறார்கள். இதன் பிறகு பிரதமர் மோடி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். பிரதமர் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. தலைவர் அன்புமணி, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மற்றும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிறிய கட்சிகளை சேர்ந்த அனைத்து தலைவர்களும் மேடையில் தோன்றுகிறார்கள். அவர்கள் அனைவருடனும் பிரதமர் மோடி ஒன்றாக கையை உயர்த்தி காண்பிக்கிறார். இதன் மூலம் தமிழகத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியின் பலத்தை காட்டவும் தமிழக பா.ஜ.க. தலைவர்கள் முடிவு செய்து இருக்கிறார்கள்.

பிரதமர் வருகையையொட்டி மதுராந்தகம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலை என்பதால் நாளை பிற்பகலில் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு அந்த வழியாக போக்குவரத்தும் தடை செய்யப்பட உள்ளது.

தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் மாமண்டூர் மற்றும் மாமல்லபுரம் வழியாக திருப்பி விடப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பிரதமர் வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுராந்தகத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் வரையில் பாதுகாப்பு ஒத்திகையும் நடத்தப்பட்டு உள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரை இயக்கி பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் அருகில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் இறக்கி பாதுகாப்பு அதிகாரிகள் ஒத்திகை பார்த்தனர்.

அந்த பகுதி முழுவதுமே மத்திய பாதுகாப்பு படையினரும், போலீசாரும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News