பொங்கல் பரிசு ரூ.3 ஆயிரத்தை அரசுக்கு திருப்பி அனுப்பிய சமூக ஆர்வலர்
- அரசின் கஜானாவில் பணத்தை சேர்க்கும்படி தலைமை செயலகத்துக்கு தபால் நிலையம் வழியாக அனுப்பி உள்ளேன்.
- இந்த ஆண்டு பரிசுத்தொகையை பெற்று நானாகவே மணியாடர் மூலமாக அரசுக்கு அனுப்பி உள்ளேன்.
நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள கருத்தப்பிள்ளையூர் கிராமத்தை சேர்ந்தவர் கிறிஸ்டோபர். சமூக ஆர்வலரான இவர் நேற்று அம்பை தலைமை தபால் நிலையத்திற்கு வந்தார்.
அங்கு தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்பட்ட ரூ.3 ஆயிரம் பரிசு பணத்தை மணியார்டர் மூலம் தலைமை செயலகத்திற்கு அனுப்பி வைத்தார்.
பின்னர் வெளியே வந்த கிறிஸ்டோபர் கூறியதாவது:-
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏழை, எளியவர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடும் விதமாக பரிசு தொகுப்போடு ரூ.3 ஆயிரம் ரொக்கம் வழங்கினார்.
அதனை நான் பண்டிகைக்கு 2 நாட்களுக்கு முன்பாக ரேஷன் கடையில் பெற்றுக்கொண்டேன். தற்போது தமிழக அரசு கடுமையான நிதிச்சுமையில் இருக்கும் நிலையில் என் வீட்டை போல், நாட்டையும் நான் நேசிப்பதால் அந்த ரொக்க பணத்தை வைத்துக்கொள்ள விரும்பவில்லை. அதனால் அரசின் கஜானாவில் பணத்தை சேர்க்கும்படி தலைமை செயலகத்துக்கு தபால் நிலையம் வழியாக அனுப்பி உள்ளேன்.
ஒவ்வொரு ஆண்டும் அரசு இதுபோன்ற பரிசுத்தொகை வழங்கும்போது அரசின் நிதி சுமையை கருத்தில் கொண்டு அந்த பணத்தை பெற்றுக்கொள்ளாமல் விட்டு விடுவேன். ஆனால் அந்த பணம் மீண்டும் அரசின் கஜானாவுக்கு முறையாக செல்லுமா? என்று எனக்கு சந்தேகம் இருந்தது.
இதனால் இந்த ஆண்டு பரிசுத்தொகையை பெற்று நானாகவே மணியாடர் மூலமாக அரசுக்கு அனுப்பி உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.