உள்ளூர் செய்திகள்

கடலூரில் பரபரப்பு 310 நபர்களிடம் தீபாவளி சீட்டு ரூபாய் 48 லட்சம் வசூல் செய்து வழங்காததால் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டு போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கடலூரில் தீபாவளி சீட்டு 310 பேரிடம் ரூ. 48 லட்சம் வசூல் பொது மக்கள் முற்றுகை- போலீசாரிடம் கடும் வாக்குவாதம்

Published On 2022-06-23 10:20 GMT   |   Update On 2022-06-23 10:20 GMT
  • கடலூரில் தீபாவளி சீட்டு 310 பேரிடம் ரூ. 48 லட்சம் வசூல் பொது மக்கள் முற்றுகை- போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
  • பணம் வசூல் செய்தது தொடர்பாக போலீசாரிடம் உரிய முறையில் புகார் அளித்தும் இதுநாள் வரை சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை‌.

கடலூர்:

கடலூர் திடீர்குப்பம் சேர்ந்தவர் ராஜா. இவர் பொதுமக்களிடமிருந்து தீபாவளி பண்டு சீட்டு நடத்தி வந்த நிலையில் ஒரு நபரிடம் 15,600 ரூபாய் என்ற கணக்கில் 310 பேரிடம் சுமார் 48 லட்ச ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. சில மாதத்திற்கு முன்பு ரா‌ஜாவுக்கு அதிக கடன் ஏற்பட்டதால், திடீரென்று தற்கொலை செய்தார். இதன் காரணமாக அவரிடம் பணம் கட்டிய அனைவரும் அதிர்ச்சி அடைந்து அவரது மனைவி மற்றும் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பணம் கட்டியவர்களிடம் பணம் வழங்குவதற்கு உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

இந்த நிலையில் பணம் கொடுத்த நபர்கள் பணம் தொடர்பாக தொடர்ந்து அவர்களிடம் கேட்டு வந்தனர். ஆனால் இதுநாள் வரை பணம் சரியான முறையில் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் இறந்த ராஜா வீட்டிற்கு இன்று காலை நேரில் சென்றனர். பின்னர் தங்களுக்கு பணம் உடனடியாக வழங்க வேண்டும் எனக் கூறி இறந்த ராஜா மனைவியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் கூறுகையில், உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்து உரிய முறையில் வழக்குப்பதிவு செய்து பணம் மீட்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது போன்று போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், பணம் வசூல் செய்தது தொடர்பாக போலீசாரிடம் உரிய முறையில் புகார் அளித்தும் இதுநாள் வரை சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை‌. எங்கள் பணம் தொடர்பாக கேட்கிறோம் என தெரிவித்தனர். அப்போது பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து வீட்டிலிருந்த இறந்த ராஜாவின் மனைவியை போலீசார் மீட்டு அவர்களது உறவினர் வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். இதனைத்தொடர்ந்து போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News