உள்ளூர் செய்திகள்

அபராத தொகை ரூ.500 இருந்தால் ஒருநாள் குடும்ப செலவை சமாளிக்கலாம்- போலீசார் அறிவுரை

Published On 2023-06-12 09:48 GMT   |   Update On 2023-06-12 09:48 GMT
  • சிக்னல்களில் போடப்பட்டுள்ள தடை கோட்டை தாண்டினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
  • சிக்னலில் பொம்மைகளுடன் கலை நிகழ்ச்சி நடத்தி போக்குவரத்து விழிப்புணர்வு செய்யப்பட்டது.

சென்னை:

போக்குவரத்து காவல்துறை சார்பில் சென்னை முழுவதும் இன்று தடை கோட்டை தாண்டி செல்லக் கூடாது என்று வாகன ஓட்டிகளிடம் போலீசார் விழிப்புணர்வு செய்தனர்.

போக்குவரத்து சிக்னல்களில் தடை கோட்டை தாண்டும் வாகன ஓட்டிகளை செல்போனில் படம் பிடித்து அபராதம் விதிக்கும் முறை தீவிரமாக சென்னை முழுவதும் நடந்து வருகிறது. அவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வாகன ஒட்டிகளின் செல்போனுக்கே சில நிமிடங்களில் அபராதம் சென்று விடும்.

இதுகுறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று முதல் 3 நாட்களுக்கு நடக்கிறது. அனைத்து போக்குவரத்து சந்திப்புகளிலும் தடை கோட்டை தாண்டும் வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து போலீசார் சாலை விதிகளை மீறக்கூடாது. சிக்னல்களில் போடப்பட்டுள்ள தடை கோட்டை தாண்டினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். தேவையில்லாமல் அபராதத்தை செலுத்தாதீர்கள். ரூ.500 இருந்தால் ஒரு குடும்பத்தின் ஒரு நாள் சராசரி செலவை சமாளிக்கலாம். தேவையில்லாமல் உங்களுக்கு அபராதம் விதிக்க எங்களுக்கு ஆசையில்லை. எனவே போக்குவரத்து விதிமுறைகளை மதித்து செல்லுங்கள் என விழிப்புணர்வு செய்தனர்.

வேப்பேரியில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு தலைமையில் சிக்னலில் பொம்மைகளுடன் கலை நிகழ்ச்சி நடத்தி போக்குவரத்து விழிப்புணர்வு செய்யப்பட்டது.

Tags:    

Similar News