உள்ளூர் செய்திகள்

வண்ணார்பேட்டையில் பெய்த மழையில் நனைந்தபடி சென்றவர்கள்.

நெல்லையில் இன்று இடி- மின்னலுடன் பலத்த மழை

Published On 2023-04-09 09:26 GMT   |   Update On 2023-04-09 09:26 GMT
  • பாபநாசத்தில் 20 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
  • இன்று மாவட்டத்தின் சில இடங்களிலும் கனமழை பெய்தது.

நெல்லை:

நெல்லை, தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. நேற்று காலை நெல்லை மாவட்டத்தில் கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் இரவில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அதிகபட்சமாக பாபநாசத்தில் 20 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. கன்னடியன் கால்வாய் பகுதியில் 10 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. இதேபோல் மணிமுத்தாறு, சேர்வலாறு உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை முதலே நெல்லை மாநகர பகுதியில் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. 10 மணிக்கு மேல் பாளை, பெரு மாள்புரம், வண்ணார்பேட்டை, என்.ஜி.ஓ. காலனி, புதிய பஸ் நிலையம் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.

இதேபோல் இன்று மாவட்டத்தின் சில இடங்களிலும் கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்தனர்.

தென்காசி மாவட்டத்திலும் தென்காசி, செங்கோட்டை, ராமநதி, குண்டாறு, அடவிநயினார் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மழை பெய்தது. குற்றாலம் பிரதான அருவியான மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குறைந்த அளவில் தண்ணீர் விழுந்து வருகிறது.

இன்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிகளில் திரண்டனர். அவர்கள் வரிசையில் நின்று அருவியில் குளித்து சென்றனர்.

Tags:    

Similar News